என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

27 December 2007

மௌனத்தின் அலைவரிசை

கிறுக்குப்பாளயத்திலிருந்து இரு பரலாங் தூரத்தில் இருக்கும் அந்த மேட்டுப்பகுதியில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறது வேந்தன் பொறியில் கல்லூரி. கருவேள மரங்களின் வரிசை, கூச்சலிடும் குருவிக் கூட்டம், எங்கோ ஓடிக்கொண்டிருக்கும் தொழிற்சாலையின் லேசான மோட்டார் சத்தம், நெடுஞ்சாலையில் ஓடும் வாகன ஒலி என்று இயற்கையும் செயற்க்கயுமாய் ஆன அழகான கிராமம். கிராமம் என்றால் கல்லூரிக்கென தனியாக உருவானது போல் இருக்கும்.சொர்ப்பமாகத் தான் ஜனத்தொகை.

அப்போது எங்களுடன் கல்லூரியில் படித்து கொண்டிருந்தவர்கள் தான் ரமேஷும் கணேஷும். வாழ்வில் எதையோ தொலைத்து விட்டு தேடிக் கொன்டிருப்பவர்களில் இவர்களும் அடக்கம். ரமேஷ் ஆத்திகம்,ஆனால் அதிகம் இல்லை. கணேஷ் நாத்திகம். ரமேஷ் கரும்பு நிறம் என்றால் கணேஷ் சந்தனம். உடலியல் ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லை தான். ஆனால் மனதில் நிலவும் மௌனத்தின் அலைவரிசையின் அளவு சமமாக இருந்ததால் ஏற்பட்ட நட்பு என்பது என் கணிப்பு. ரமேஷ் அவ்வளவாக படிப்பதில்லை எல்லாமே கேள்வி ஞானம் தான். கணேஷ் படிப்பில் கெட்டி. அதனாலேயே மற்றவர்களிடம் பேரன்பும் பெருமதிப்பும். இருவரும் பேச தொடங்கினால் நாள் கணக்கு தெரியாமல் அரட்டை அடிதொக்கொண்டு இருப்பார்கள். கல்லூரிக் காலம் முழுவதும் ஒன்றாகவே திறிந்தார்கள். பொறியியலை விட வாழ்வியல் நுணுக்கங்களை தான் அதிகம் அலசுவார்கள். சினிமா,அரசியல்,வரலாறு,புவியல்,புள்ளிவிவரம்,பொருளாதாரம் என்று இவர்கள் பட்டியல் நீளும். ஆனால் பேசுவதிலும் கேட்பதிலும் கவனம் இருவரிடமும் அகலம். அவர்களுக்கு காரல் மார்க்ஸ் & ஏங்கல்ஸ் என்று நினைப்பு என்று கூட நாங்கள் நக்கல் செய்ததுண்டு. அவர்களின் நட்பு வட்டமும் கூட பெரியது தான் நான் உட்பட. இருந்தாலும் அதிகம் யாரிடமும் ஒட்டுவதில்லை. ரமேஷிற்கு எதிலும் அக்கறை கொஞ்சம் அதிகம். பொதுவாகவே நண்பர்களிடத்தில் அக்கறை செலுத்துபவன். கொஞ்சம் முரடன் போல் தொற்றமளிப்பதனால் அவனிடம் புதிய மனிதர்கள் நெருங்குவது கடினம், பெண்களும் சரி ஆண்களும் சரி. கணேஷ் நகரத்திற்குள் வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அவனுக்கு நாகரிகம் தெரியும். ரமேஷ் கிராமம் என்று சொல்ல முடியாது ஆனால் அவன் முன்பு பார்த்திராத விஷயங்கள் நிரம்ப இருந்தது. அங்கு தான் கண்டவையும் கற்றவையும் எண்ணில், நிறையவே அடங்கும். தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்வான் பிறகு மாட்டிக்கொள்வான். அறை நண்பனுடன் வேலி தாண்டியது, பரிச்சையில் பிட் அடித்து மாட்டிக்கொண்டது, வகுப்பறையில் யாரோ ராகெட் விட இவன் மாட்டிக்கொண்டது, கலவரம் நடந்த இடத்தில் நின்றதற்காக பிடிபட்டது, இப்படி இவன் செய்த சாதனைகளுக்கு விருதே கொடுக்கலாம். இப்படி குற்றங்கள் நிறைந்த வாழ்கை இவனுடையது. இப்படி மட்டிகொள்வதில் இவன் இன்னொரு கைப்பிள்ளை. இப்படி எதுவும் இல்லாமல் தொட்டதெல்லாம் துலங்கும் ராசி உடையவன் கணேஷ். பரிச்சை ஆகட்டும், கட் அடிப்பதில் ஆகட்டும் எதற்கும் ஒரு வரை முறை உண்டு. நிறைய படிக்கும் அவனுக்கு படிப்பை முடித்துவிட்டு உடனே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை. ரமேஷுக்கும் சூழ்நிலை அப்படித்தான் ஆனால் அவன் அவனவன் போக்கில் எப்போதும். பத்தாத குறைக்கு வர்ஷா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு காதல் வேறு அவனை சீரழிக்க, பித்துபிடிக்காத குறை. கோட்பாடு இல்லாத காதல் எதையும் பெற்றுத்தராது என்பது அவனுக்கு மட்டுமன்று எங்களிலும் பலருக்கு விளங்காமல் போயிற்று. பெண்ணுடன் நாகரிகமாக பேச பழக தெரியாதவனுக்கு இதெல்லாம் தேவையா என்று கூட தோன்றும். எப்படியும் முறிந்து போகாது என்ற நம்பிக்கையில் அலைமேல் விழுந்து விளையாடும் நுரையாய் ரமேஷ். அவன் கல்லூரிக் காலம் முழுவதும் அவளுக்கென கவிதை எழுதுவதும் கடிதம் எழுதுவதிலும் முடிந்து போயிற்று. நிறைய கவிதை கிறுக்குவான். கல்லூரியும், காதலும் முடிந்தவுடன் அவன் கவிஞர் வாழ்க்கையும் முடிந்துவிட்டது. ஆனால் காதலிக்கும் ஒவோருவனும் வாழ்கையே கவிதையாக மாறிவிட்டதாக நினைத்துக்கொள்வது சகஜம்தானே. ஆல் பாதி ஆடை பாதி என்பார்கள் ஆனால் ரமேஷுக்கு இரண்டுமே கொஞ்சம் பலவீனம். எதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும் அது அவனிடம் சுத்தமாக இல்லை அப்போது. புத்திசாலித்தனம், சுயபுத்தி, சொல்புத்தி எதுவும் கிடையாது. இப்படி எந்த தகுதியும் இல்லாதவன் எப்படி தான் ஜீவகரணம் செய்யப்போறானோ என்ற ஒரு பெரிய கேள்விக்குறி என்னை மேலும் யோசிக்க வைத்தது. அவன் யோசித்ததாக தெரியவில்லை. ஆனால் அவன் கவிதை வாழ்கை எல்லோர்க்கும் பிடித்திருந்தது. எதையும் கவிதையாக பார்க்கிற உணர்வு. எந்த ஒரு நிகழ்ச்சியையும் திரைகதையில் சொல்லும் அவன் பாங்கு. இப்படி ஒரு சில நல்ல விஷயங்களும் உண்டு.


கணேஷுக்கும் ரமேஷுக்கும் ஏறக்குறைய ஒரே சிந்தனை. இருவருக்கும் புலம்பல் செவியாய் இருந்தவள் வர்ஷா. இடையில் ரமேஷுக்கு ஏற்பட்ட பல உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தான். ஆகையால் மற்ற இருவரின் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தான். பரிச்சை நேரம் நெருங்கியதும் முழுமையாக துண்டிக்க பட்டுவிட்டான். சில காரணங்களற்ற விஷயங்களால் உருகி மருகி கொண்டிருந்தான். பரிட்சை முடிந்தது. ஒரு மழை மாதம் முடிந்து கல்லூரிக்கு திரும்பிய முதல் நாள் ரமேஷ் வர்ஷவை சந்தித்தான். அவன் கடிகாரத்தில் முற்கள் இரண்டும் ஒரு சேர இருந்தது. முற்கள் விலக விலக பேச்சும் விலகியது அவனும் விலக்கப் பட்டான். சிறகு வெட்டப்பட்ட காக்கை போல் திடுக்கிட திரும்பி வந்தான். அடிபட்டு விழுந்ததை பார்க்க ஓடி வந்த காக்கை கூட்டமாய் நண்பர்கள். அவன் காதல் முரிந்த அர்த்தமில்லாத கதையை கேட்டு நான் அதிரவில்லை. ரமேஷ் செல்லவிருக்கும் பாதை முற்றிலும் தெளிவுற்றதாக உணர்ந்தேன்.

உலகை அதிர வைத்தவர் பிடெல் காஸ்ட்ரோ உலகை சிரிக்க வைத்தவர் சார்லே சாப்ளின் இருவருக்குமே முதல் காதல் தோல்வி தான் என்று புள்ளி விவரங்கள் சொல்லி தேற்றினான் கணேஷ்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவது தானே நட்பு"

இருவருக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தான் போய்க்கொண்டிருந்தது. ஏனோ இருவர் கண்களும் சந்திக்கும் அந்த நேர்கோடு தடம் மாறிப்போனது. மௌனத்தின் அலைவரிசையும் மாறிவிட்டது. இரண்டாவது சிறகும் வேட்டப்பட்டவனாய் ரமேஷ். சர்ச்சைகுள்ளாகும் சரித்திரமாய் மூவரும். அனுவின் கதிரியக்கம் தாக்கியது போல கணேசையும் தாக்கியது இன்னொரு பெண்ணின் காதல். கலைந்த குட்டைக்குள் இருக்கும் தவளைக் குஞ்சாய் சில காலம் சிந்தனை பிளவுற்று சுற்றினான். பிறகு அனுவின் கதிர்கள் திசை திரும்பியதால் தப்பினான். கல்லூரி காலமும் முடிந்தது. நாங்களும் கல்லெறியப்பட்ட தேனீக்களாய் பறந்து சென்றோம். எல்லோரும் பட்டம் பெற்றதே சாதனையாக அடுத்த கட்டத்திற்கு தாவினோம். கலைந்த குட்டை தெளிந்த பிறகு காணவில்லை கணேஷை. எல்லா வலைத்தளத்திலும் கூட தேடியாயிற்று அவன் கிடைத்தபாடில்லை. ஏமாற்றம் ரமேஷுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் தான். சொல்லாமல் போவது தானே நல்ல பிள்ளைக்கு அழகு. அமெரிக்காவோ அல்லது லண்டனோ தஞ்சம் அடைந்திருப்பன் என்று முடிவுசெய்துவிட்டோம். இரை தேடி வட்டமடிக்கும் குருவிக் கூட்டமாய் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தோம். எங்களில் சிலர் கூடு கிடைத்து குடியேரிவிட்ட்டர்கள் சிலர் இன்னமும் வட்டமடிக்கும் வண்ணத்துபூசியாய். காலமும் வேகமாக நகர ஆரம்பித்துவிட்டது.

இன்னும் சுயம் தேடி அலைந்து கொண்டிருக்கும் சுப வேளையில், மிக சமீபத்தில் கணேஷை சந்திக்க நேர்ந்தது. என்னை பார்த்த பிறகும் அவனது பரவச அலைகளின் அளவை(unit) பூஜ்ஜியமாகவே இருந்தது. அவனிடம் சிறிய மாற்றம் தெரிந்தது. அந்த பழைய வசீகரம் இல்லை. பழுத்த பற்களுடன் வேப்பம்பழத்தில் கசியும் இனிப்பாய் பேசினான். ஒரு ரெஸ்டாரன்டில் அமர்ந்து பேசுகையில் ரமேஷையும், வர்ஷாவையும் கவனம் ஈர்தேன். அதற்கு அவன் தட்டில் ஸ்பூனால் கிருக்கியபடியே பேசினான் "ரமேஷ்.......ஷ் தெரியல மச்சி ". வர்ஷா மட்டும் ஹைதரபாத்தில் இருப்பதாக அவனிடம் இருந்து தெரியவந்தது. விடை பெற்று கிளம்பியதும் மனசு கேட்காமல் ரமேஷிற்கு ஒரு ஈமெயில் அனுப்பிவிட்டு சென்றேன். கீழ்வானம் சிவக்கையில் நான் வீட்டை அடைந்திருந்தேன். அப்போது ரமேஷிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. இவன் ஆர்வம் நான் அறிந்தது தான். அதனால் சலனம் ஏற்படவில்லை பதிலாக ஒன்று தோன்றியது மனிதனை மனிதன் மறப்பதும் மறுப்பதும் இயற்கை தானே. எப்போதும் சேர்ந்தே இருந்தால் பிரிவுக்கான அர்த்தம் தான் என்ன.

16 December 2007

நிராகரிப்பு

நிராகரிப்பு......கூர்வாளால் குத்துவதை விட கொடூரமானது. அது நிகழும்போது ஒருவன் என்ன மனநிலையில் இருக்கிறானோ அது தான் அவன் வாழ்வை தீர்மானிக்கிறது.சில நேரங்களில் சாவையும்.எப்போது நிகழ்கிறது அது?எதையாவது யாரிடமாவது எதிர்பார்க்கும் போது.நிராகரிப்பு மனிதன் பிறக்கும் போதே பிறந்ததா.இல்லை நாகரிகம் பிறந்தவுடன் வளர்ந்ததா. பரிமாணங்கள் வளர வளர இதுவும் வளர்ந்துவிட்டது.செயல் ஒன்று தான்,இடங்கள் தான் வேறு.

சிலர் பள்ளியில் ஆசிரியர்களால் நிராகரிரிக்கபடுகின்றனர், சிலர் பள்ளியை விட்டு கல்லூரிகளில் நிராகரிக்கப்படுகின்றனர், சிலர் வேலை தேடும்போது அல்லது வேலையில் சேரும்போது நிராகரிக்கப்படுகின்றனர்,சிலர் திருமணத்தின் போது,சிலர் நண்பர்களால், சிலர் எல்லாவற்றிலும் அங்கிகரிக்கப்பட்டு வெற்றியும் கண்டுவிடுவார்கள் ஆனால் தனது பிள்ளைகளால் நிராகரிக்கப்படுவார்கள்.சிலர் பிறந்தவுடனேயே நிராகரிக்க படுகின்றனர்.

ரயில் அல்லது பஸ் பயணங்களில் அருகில் இருப்பவர் பேச மறுத்தால் அது நிராகரிப்பா? தனக்கு பிடித்த பெண் தன்னை பார்க்க மறுத்தால் நிராகரிப்பா? பிச்சைக்காரன் தட்டை ஏந்தும் போது பிச்சையிட மறுத்தால் அது அவனை நிராகரிப்பதா? தப்புகள் செய்து தண்டனை அனுபவிக்கும் சிறை கைதிகளை நாம்(சமூதாயம்) நிராகரித்துவிட்டோமா? நாள் தவறாமல் குடித்துவிட்டு வரும் அப்பாவையோ,மகனையோ நாம் நிராகரிக்கிரோமா? பஜாரில் கர்சீப்பை விலை விசாரித்துவிட்டு வாங்காமல் போனால் அது கடைக்காரனை நிராகரிப்பதற்கான துவக்கமா? வெளிநாடு சென்று மிகக் குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் உள்நாட்டில் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தமா? ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை ஏற்க மறுக்கிறது அது எதை நிராகரிப்பதற்கு? ஒரு பெண் ஆணையோ அல்லது ஒரு ஆண் ஒரு பெண்ணையோ ஏற்க மறுப்பதும் நிராகரிப்பு தானா?ஒருவன் வளரும்போதே நிராகரிக்க தொடங்குகிறான்,ஒருவன் வளரும்போதே நிரகரிக்கப்படுகிறான்.எது இயல்பானது. நிராகரிக்கப்பட்டவன் ஒரு புள்ளியில் அங்கிகரிக்கப்படத்தான் வேண்டுமா? படுவானா?

நாம் பிறந்த உடன் உலகை நிராகரிக்கிறோம் கடைசியில் உலகம் நம்மை நிராகரிக்கிறது.நிராகரிப்பு என்பது வாழ்கையின் ஒரு அங்கம் ஆகிவிட்ட நிலையில் என்ன செய்வது.நிராகரிப்பு என்பது அங்கிகாரத்தின் எதிர்சொல் என்று கூட தெரியாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதன் அர்த்தம் நாளுக்கு நாள் மாறிவருவதாக தெரிகிறது.அர்த்தம் மாறுவது எதை குறிக்கிறது.எல்லோரும் அங்கிகரிக்கப்படுகின்றனரா?எல்லோரும் அங்கிகரிக்கப்படத்தான் வேண்டுமா?தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.

11 December 2007

சுல்தான் பாய்

ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து பத்து கி.மீ தொலைவில் உள்ள சிறிய கிராமம்.இஸ்லாமிய மக்கள் நிறைந்த ஊர்.தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு தொழுகை முடித்து விட்டு வீட்டுக்கு அருகே உள்ள தேநீர் கடையில் தஞ்சம் அடைவார் சுல்தான் பாய்.அன்று மாஸ்டர் ஒரு டீ சக்கரை கம்மி என்று மட்டும் கூறிவிட்டு தினத்தந்தியை பிரித்தபடி அமர்ந்தார். இரவு சரியான உணவில்லததால் விழிப்பு வந்து விட சோம்பல் முறித்தபடி வந்து நின்றது வெள்ளை நிற நாய் ஒன்று. ஊரில் உள்ள மக்களுக்கு மட்டுமன்று சில மாக்களும் எளிதில் அடையாளம் கண்டு விடும் சுல்தான் பாயை. காலையில் எழுந்தவுடன் அம்மா காபி என்று வந்து நிற்கும் சிறிய குழந்தை போல ஒரு பார்வையை வீசியது அது. மாஸ்டர் ஒரு பால் என்றார், உடனே ஒரு பன்னையும் வாங்கி போட்டு விட்டு அது தின்று முடிக்கும் வரை தந்தியை பார்த்து விட்டு போனார். தின்று முடித்து விட்டு சிறிது தூரம் பாயை தொடர்ந்து விட்டு அது தன் வேலையை தொடர்ந்தது.இது எங்களுக்கு அன்றாடம் என்பதால் பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை.


பாய் வீட்டை அடைந்ததும் ரோசிக்கு(இதுவும் நன்றி உள்ள ஜீவன் தான்) பாலை ஊட்றிவிட்டு,பின் அவர் தன் மனைவியை எழுப்பாமல் வீட்டு வேலைகளை தொடர்ந்தார். அவருக்கு இப்போது சிந்தனை எல்லாம், யாராலோ அடித்து துரத்தப்பட்ட தனது வீட்டருகே தஞ்சம் புகுந்திருக்கும், ஒரு கால் அடிபட்டு மூக்கு வெளிறி இருக்கும் கழுதையைப் பற்றித்தான்.நேற்று முதல் முயற்சி செய்தும் அதை அருகில் உள்ள தேநீர் கடைக்கு அழைத்து போக முடியாதது தான். எதுவாயினும் இன்று முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தவராய் வேலையை தொடர்ந்தார். அவருக்கு குழந்தை பேறு கிடயாததால் கடமைகளும் குறைவு தான். இவர் செய்வதை எல்லாம் சகித்து கொண்டு இவருடன் சேர்ந்து வாழ்ந்து வரும் அறியாத ஜீவன்(மனைவியின்) பெயர் பாத்திமா.இவர்களுக்கெல்லாம் அன்பும் கருணையும் எங்கிருந்து வருகிறது? பிறக்கும் போதே அதிக வட்டிக்கு வாங்கிக்கொண்டு வந்தவர்களா என்று கூட நாங்கள் வியந்ததுண்டு.ஆர்வலர்கில்லை அடைக்குந்தாழ் என்பதை இவர்களைப் பார்த்தால் புரியும்.இவர்களை அறியாமை ஆட்டிவைத்தாலும் இவர்களின் கொள்கையை யாராலும் ஆட்டிவைக்க முடியாதது ஆச்சர்யம்.


எப்போதும் உணர்ச்சி வசப்படுபவன் தமிழனே என்பதை தினமும் காட்சிகளாக்குபவர் சுல்தான் பாய். வேலியோரம் செல்லும் ஓணானை பிடித்து வாலில் கட்டிவிட்டு விளையாடும் சிறுவர்களிடம் மல்லுக்கட்டி விடுதலை செய்வார். ஊர் சந்தையில் விற்கும் அழகான கோழிகளை விலைக்கு வாங்கி வளர்ப்பார் விற்க மாட்டார் பலியும் கொடுக்க மாட்டார். ஊரில் பெரும்பான்மை நாய்களுக்கு மகப்பேறு நடப்பது சுல்தான் பாய் கொள்ளையில் தான்.அவர் அறியாத பறவை வகைகள் குறைவு தான்.மனிதர்களுக்கு மட்டும் அல்லாது மிருகங்களுக்கும் அவர் தான் வைத்தியர்.

ஒரு நாள் பக்கத்து வீட்டு புறா ஒன்று எதிரில் உள்ள தெருவிளக்கு கம்பம் ஒன்றில் உட்கார்ந்துகொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.திடீரென்று எங்கிருந்தோ வந்து விழுந்த கல் ஒன்று புறாவின் கண்ணை பதம் பார்க்க.உடனே அந்த உண்டிவில் அர்ஜுனனை இவர் பதம் பார்த்தார்.ஒரு கண் போன புறா வளர்த்தவரால் நிராகரிக்கப்பட்டது.சுல்தான் பாயிடம் அடைகளம் புகுந்தது.ஐந்து அறிவு ஜீவன்களை வளர்ப்பது குற்றம் என்று குரானில் கூயிருப்பதாக மசூதியில் போதித்ததால் மசூதியையே புறக்கணித்தார். எங்கள் ஊரில் சில மிருகவதம் தடுக்கப்படுவது இவரால் தான்.அதற்காக இவர் ப்ளூ கிராசர் அல்லர் உயரிய ப்ளாக் கிராசர்.இஸ்லாமியர்களை அப்படித்தான் குறிபிடுவோம்.இரவு நேரத்தில் கோடுபோட்ட அன்றாயர்யுடன் பத்து நாய்கள் புடைசூழ நாடா கட்டிலில் படுத்திருபதே ராஜ கலை தான்.

சரி என்று பிற்பகல் பண்ணிரெண்டு மணிக்கு கழுதைக்கு வைத்தியம் பார்க்க முடிவு செய்து புறப்பட்டார். நான் இல்லை என்று அடம்பிடிக்கும் கழுதையை ஏதோ பேசி பாடுபட்டு இழுத்து சென்று வைத்தியம் பார்த்தார்.அருகில் உள்ள டீ கடையில் இரண்டு பழங்களை வங்கி போட்டு விட்டு காலில் கட்டுடன் நடந்து செல்லும் கழுதையை வெற்றிக்களிப்பில் வெகு நேரம் பார்துகொண்டிருந்தார்.சுல்தான் பாய் இஸ்லாமியராய் இருந்தாலும் அசைவம் விரும்பாதவராய் இருந்ததால் அவரையும் இலட்சியவாதிகளின் வரிசையில் தாராளமாய் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு முறை வைத்திய சாலையின் ஆய்வு கூடத்தில் குடுவை வெடித்து ஒரு கை மற்றும் முகம் கருகி போய் சட்டென்று விழுந்தவர் விருட்டென்று எழுந்தார் ஓரிரு நாட்களில்.முன்பே சற்று கருப்பாய் இருப்பார்,அதானால் பெரிய தாக்கம் ஒன்று இல்லை அவரிடத்தில்.இருந்தும் அதே வெண்நிற ஆடையில் பல நாய்கள் புடை சூழ நடப்பதே தனி அழகு.சிலருக்கு கோபத்தையும் சிலருக்கு பிரமிப்பையும் சிலருக்கு பரிதாபத்தையும் ஏற்படுத்தும்.நிறைகுடம் தளும்பாது என்பதை நிரூபித்தவராய் சலனமற்று நடப்பார்.சுல்தான் பாயின் ஒரே கை இருப்பு பூமார்க் பீடியும் சில பிஸ்கட்டுகளும். எப்பேர்ப்பட்ட கொடூரமான நாயும் ஓரிருமுறையாவது வால் அசைக்கும்.

ஊரில் அப்போது தெரு நாய்களுக்கு தடா விதித்தார்கள்.இதை கேள்விப்பட்டு கையில் லைசென்சுடன் அலைந்தவர், ஊரில் உள்ள எல்லா பெரும்பாண்மை நாய்களுக்கும் கட்டி விட்டார்.இதனால் சில பிரச்சனைகளுக்கும் ஆளாகப்ப்பட்டார்.எல்லா தரப்பு மக்களும் தெரிந்ததனால் பிளைத்துகொண்டர்.ஊரில் உள்ள பெரும்பாண்மை நாய்களை காப்பாற்றிய சாதனையால் இரவு சாப்பாட்டை ரத்து செய்தார்.காரணம் சாப்பாட்டுக்கு வைத்திருந்த பணம் லைசென்சாக மாறியது தான்.அவரின் கண் உறங்கினாலும் உதடு பூமார்க் பீடியை புகைத்து கொண்டு தான் இருக்கும்.

அப்போது மழைக்காலம், முப்பத்தி ஐந்து வயது செல்லியம்மா பள்ளிகூடம் ஒன்றில் சத்துணவு சமைப்பவள். மஞ்சள் காமாலையால் துடிதுக்கொண்டிருந்தாள்.வசதி குறைவால் கவனிக்காமல் விட்டுவிட்டர்கள்.படுத்த படுக்கை.பத்து வயது மகனுடன் என்ன செய்வாள் பாவம். அடுத்த நாள் ஊர் பெருசுகள் ஒன்று கூடி செலவுகளை வசுவுகளோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியில் இருந்தபோது, உள்ளே நுழைந்தார் சுல்தான் பாய். தான் செய்து வைத்திருந்த நாட்டு மருந்தை சோதிக்க சரியான நேரம் பார்த்து காத்திருந்தவராய் களத்தில் இறங்கினார்.சிறிய பால் காகிதத்தில் சுருட்டி வைத்திருந்த மருந்தை பிதுக்கி செல்லியம்மா நாக்கில் தடவினார்.கொஞ்சம் தண்ணீரையும் வாயில் ஊற்றி படுக்க வைத்தார். மறுபடியும் கட்டிலில் சாய்ந்தாள் செல்லியம்மா.எல்லோரும் கைவிரித்தபடி கலைந்தனர்,சுல்தான் பாயும் பவிளியன் திரும்பினார்.இரண்டு நாள் வெளியூர் சென்று திரும்பியவர் சுல்தான் பாய் ஊர் திரும்பிய போது வழியில் செல்லியம்மாவை பார்க்க அவர் வீட்டிற்க்கு சென்றார். பாய்க்கு வெற்றி.மருந்து வேலை செய்திருந்தது. அன்று தான் முதல் பவுண்டரி அடித்த களிப்பில் வீட்டில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் விருந்து.அப்போது முதல் இப்போது வரை மஞ்சள் காமாலைக்கு பாய் தான்.பக்கத்து கிராமங்களிலும் சுல்தான் பாய் பிரபலம்.

தனது ஆராய்ச்சியை முடுக்கி விட்டபடி வைத்திய சாலையில் மும்முறமானார். சில மாதங்களில் பல நாட்டு மருந்துகளை தயார் செய்து வைத்திருந்தார். இவர் ஆராய்ச்சியில் கால் நடைகளுக்கான மருந்துகளும் உண்டு.பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது போல் பாத்திரம் அறிந்து வைத்தியம் செய்வார்.கால்நடைகளுக்கு எப்போதும் இலவச மருத்துவம் தான்.இப்போதெல்லாம் சுல்தான் பாயை பார்ப்பதே அரிதாகிவிட்டது.வைத்திய தொழிலில் சற்று முழு ஈடுபாட்டுடன் இருந்தாலும் இன்றும் அவருடைய ஒரே கவலை, ஊரில் உள்ள வாயில்லா ஜீவன்களுக்கு யார் வக்காலத்து வாங்குவது என்பதுதான்.இப்போதும் தன் கடமையாய் வீட்டில் இருபது நாய் உட்பட ஐம்பத்துக்கும் மேற்பட்ட ஜீவன்களுக்கு வாழ்வளிக்கிறார்.அறிந்து செய்தாலும் அறியாமையால் செய்தாலும் மனித நேயத்துக்கு பொருள் ஒன்று தான் மனிதனானாலும் சரி மிருகம் ஆனாலும் சரி.

நாம் கதைகளிலும், கட்டுரைகளிலும் காமராஜர்,காந்திஜி,காயிதே மில்லத்,பெரியார் என்ற நீண்ட, தெரிந்த பட்டியலையே படித்துக்கொண்டு இருக்கிறோம்.சக மனிதனிடமிருந்தும் கற்றுக்கொள்ள துடிக்கும் யாவருக்கும் சுல்தான் பாய் ஒரு பாடம் தான் மனிதம் நிறைந்த நேயத்தில்.நாமும் நேசிப்போம்.

"அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு"

27 November 2007

நீ

நீ காற்று என்றேன் உட்புகுந்து மூச்சனாய்

நீ மேகம் என்றேன் என் மீது மழை ஆனாய்

நீ நீர் என்றேன் ஆறாய் மாறி அழைத்து சென்றாய்

நீ நெருபென்றேன் என்னை உருக்கி உன்னுள் வார்தாய்

நீ நிலம் என்றேன் மடி கொடுத்து உறங்க வைத்தாய்

நீ காதல் என்றாய் நான் கவிஞனானேன்!!

விதவை


புள்ளி இல்லாத

கேள்விக்குறியாய் காத்திருக்கிறாள்

முற்றுப்புள்ளியாய் மாறுகிற

ஒற்றைப் புள்ளிக்காக........!

விதிவிலக்கு

சிம்மினி விளக்கைத் தீண்டும்

விட்டில் பூச்சியாய் சுற்றினாய்.

பருவமாற்றத்தால்,

இன்று நீ!

சீமை விளக்கை சுற்றும் விட்டில் பூச்சியாய்!

தேர்வில்(தேர்ந்தெடுப்பதில்)

மற்ற அக்றினைகளை மிஞ்சிவிட்டாய்...

நான் மட்டும் இங்கு விதிவிலக்காய்...

தேடுகிறேன்

தொலைநோக்குப் பார்வையை தொலைத்து விடுகிறேன்!

தோன்றுகின்ற வார்த்தைகளை தூக்கிலிடுகிறேன்!

கைது செய்யும் கண்களை கரைய வைக்கிறேன்!

சிந்தனையும் செயலயும் சிறையிலிடுகிறேன்!

எழுச்சி மிகுந்த எண்ணங்களை எரித்துவிடுகிறேன்!

இப்படி நிலவை விழுங்கிய இரவாய் விழித்திருக்க

நான் தோற்றுபோனவனா இல்லை?

உன்னுள் தொலைந்துபோனவனா?

26 November 2007

அப்பா வாசணை

அப்பா புகைகிறார் நடு வீட்டில், வழக்கமான வசவுகளில் இறங்கிய அம்மாவை பொருட்படுத்தாமல். புகைவாசணையின் அர்த்தங்கள் புரியாமலேயே நான். எப்போதும் புகைகிற அப்பாவை அலட்சியபடுதியபடியே படி இறங்கினேன், அடுத்த வாரம் ரூபாய் இருபத்தி ஐந்து ஆயிரம் இருந்தால் கல்லூரிக்குள் நுழையலாம் என்ற ஏக்கத்துடனேயே. பிறந்த நாள் முதல் எனக்கும் அப்பாவுக்குமான தூரத்தை இட்டு நிரப்பியவள் அம்மா. எதுவானாலும் அம்மாதான்.சாப்பாடு,காசு எதுவேண்டுமானாலும் கிடைக்கும் வசவுகளோடு சேர்த்து.என்னை திட்டவோ என் தவறை கண்டிக்கவோ விரும்பாத அப்பாவை நான் விரும்பவில்லை.பள்ளியில் ஆண்டு விழாவோ பெற்றோர் அழைபிற்கோ வராதவர் என்ன சாதிக்க விரும்புகிறார் என்பது புரியவில்லை அல்லது புரிய வயதில்லை. அலட்சியம் அதிகரித்து விட்டது, என்னிடம். "தம்பி"(அப்படித்தான் அழைப்பார்) நாளைக்கு தயாரா இரு - இது அப்பா. என்னுடன் புகையை கிளப்பிய படியே கிளம்பினார்.கல்லூரியில் சேர்த்து விட்டு கொஞ்சம் பணத்தையும் எனது பையில் வைத்து விட்டு போனார். ஆறாவது மாதம் முடிந்தாயிற்று கல்லூரி மாதிரி தேர்வு மதிப்பெண் சீட்டு வீட்டில் பெற்றோரை அழைத்தது. (சரி இல்லை என்றால் தானே பெற்றோரை அழைப்பார்கள்).இதுவரை எதற்கும் வராதவர் இதற்கா வரப்போகிறார்! எனது அலட்சியம் சதவிகிதம் கூடியது. அன்று வெள்ளிக்கிழமை சூரியன் உச்சத்தில். உணவை முடித்துக்கொண்டு நண்பனின் அறையில் படுத்தபடி நான். " டேய் உங்க அப்பா வந்திர்க்கருடா" என்றான் ஒரு நல்லவன். ஆவலுடன் தேடவில்லை.சற்றே நடந்து சென்று கல்லூரி வாசலில் இருக்கும் பெட்டிக்கடையோரம் பார்வையிட்டேன் தென்பட்டார் அப்பா, சிகரட் புகையின் மறைவிலிருந்து. சிறிதும் மலர்ச்சி இல்லை இருவரிடமும். காலில் கட்டு, செருப்பில்லாத வெறுங்காலுடன் நடந்து என்னிடம் வந்தார்.மதிபெண் சீட்டு அவர் சட்டைப்பையிலிருந்து எட்டிப்பார்த்தது.பயந்து நின்ற என்னிடம் பையிலிருந்து சீட்டுடன் ஒரு தொகையும் தந்து விட்டு சிறிய பார்வை ஒன்றையும் வீசிவிட்டு சற்றே சிரமப்பட்டு நடந்து சென்றார்.கையில் இருந்த சீட்டை பிரித்தேன் கல்லூரியில் கட்ட வேண்டிய மீதத்தொகையையும் கட்டிவிட்ட்ட தாகக் கூறியது. கலங்கிய கண் தேடியது அப்பாவை தூரத்தில் மறைந்தார் சிகரட் புகையினூடே. அது வரை வசப்படாத வாசணை அன்று வசப்பட்டது. அது அப்பா வாசணை. .