என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

11 December 2007

சுல்தான் பாய்

ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து பத்து கி.மீ தொலைவில் உள்ள சிறிய கிராமம்.இஸ்லாமிய மக்கள் நிறைந்த ஊர்.தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு தொழுகை முடித்து விட்டு வீட்டுக்கு அருகே உள்ள தேநீர் கடையில் தஞ்சம் அடைவார் சுல்தான் பாய்.அன்று மாஸ்டர் ஒரு டீ சக்கரை கம்மி என்று மட்டும் கூறிவிட்டு தினத்தந்தியை பிரித்தபடி அமர்ந்தார். இரவு சரியான உணவில்லததால் விழிப்பு வந்து விட சோம்பல் முறித்தபடி வந்து நின்றது வெள்ளை நிற நாய் ஒன்று. ஊரில் உள்ள மக்களுக்கு மட்டுமன்று சில மாக்களும் எளிதில் அடையாளம் கண்டு விடும் சுல்தான் பாயை. காலையில் எழுந்தவுடன் அம்மா காபி என்று வந்து நிற்கும் சிறிய குழந்தை போல ஒரு பார்வையை வீசியது அது. மாஸ்டர் ஒரு பால் என்றார், உடனே ஒரு பன்னையும் வாங்கி போட்டு விட்டு அது தின்று முடிக்கும் வரை தந்தியை பார்த்து விட்டு போனார். தின்று முடித்து விட்டு சிறிது தூரம் பாயை தொடர்ந்து விட்டு அது தன் வேலையை தொடர்ந்தது.இது எங்களுக்கு அன்றாடம் என்பதால் பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை.


பாய் வீட்டை அடைந்ததும் ரோசிக்கு(இதுவும் நன்றி உள்ள ஜீவன் தான்) பாலை ஊட்றிவிட்டு,பின் அவர் தன் மனைவியை எழுப்பாமல் வீட்டு வேலைகளை தொடர்ந்தார். அவருக்கு இப்போது சிந்தனை எல்லாம், யாராலோ அடித்து துரத்தப்பட்ட தனது வீட்டருகே தஞ்சம் புகுந்திருக்கும், ஒரு கால் அடிபட்டு மூக்கு வெளிறி இருக்கும் கழுதையைப் பற்றித்தான்.நேற்று முதல் முயற்சி செய்தும் அதை அருகில் உள்ள தேநீர் கடைக்கு அழைத்து போக முடியாதது தான். எதுவாயினும் இன்று முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தவராய் வேலையை தொடர்ந்தார். அவருக்கு குழந்தை பேறு கிடயாததால் கடமைகளும் குறைவு தான். இவர் செய்வதை எல்லாம் சகித்து கொண்டு இவருடன் சேர்ந்து வாழ்ந்து வரும் அறியாத ஜீவன்(மனைவியின்) பெயர் பாத்திமா.இவர்களுக்கெல்லாம் அன்பும் கருணையும் எங்கிருந்து வருகிறது? பிறக்கும் போதே அதிக வட்டிக்கு வாங்கிக்கொண்டு வந்தவர்களா என்று கூட நாங்கள் வியந்ததுண்டு.ஆர்வலர்கில்லை அடைக்குந்தாழ் என்பதை இவர்களைப் பார்த்தால் புரியும்.இவர்களை அறியாமை ஆட்டிவைத்தாலும் இவர்களின் கொள்கையை யாராலும் ஆட்டிவைக்க முடியாதது ஆச்சர்யம்.


எப்போதும் உணர்ச்சி வசப்படுபவன் தமிழனே என்பதை தினமும் காட்சிகளாக்குபவர் சுல்தான் பாய். வேலியோரம் செல்லும் ஓணானை பிடித்து வாலில் கட்டிவிட்டு விளையாடும் சிறுவர்களிடம் மல்லுக்கட்டி விடுதலை செய்வார். ஊர் சந்தையில் விற்கும் அழகான கோழிகளை விலைக்கு வாங்கி வளர்ப்பார் விற்க மாட்டார் பலியும் கொடுக்க மாட்டார். ஊரில் பெரும்பான்மை நாய்களுக்கு மகப்பேறு நடப்பது சுல்தான் பாய் கொள்ளையில் தான்.அவர் அறியாத பறவை வகைகள் குறைவு தான்.மனிதர்களுக்கு மட்டும் அல்லாது மிருகங்களுக்கும் அவர் தான் வைத்தியர்.

ஒரு நாள் பக்கத்து வீட்டு புறா ஒன்று எதிரில் உள்ள தெருவிளக்கு கம்பம் ஒன்றில் உட்கார்ந்துகொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.திடீரென்று எங்கிருந்தோ வந்து விழுந்த கல் ஒன்று புறாவின் கண்ணை பதம் பார்க்க.உடனே அந்த உண்டிவில் அர்ஜுனனை இவர் பதம் பார்த்தார்.ஒரு கண் போன புறா வளர்த்தவரால் நிராகரிக்கப்பட்டது.சுல்தான் பாயிடம் அடைகளம் புகுந்தது.ஐந்து அறிவு ஜீவன்களை வளர்ப்பது குற்றம் என்று குரானில் கூயிருப்பதாக மசூதியில் போதித்ததால் மசூதியையே புறக்கணித்தார். எங்கள் ஊரில் சில மிருகவதம் தடுக்கப்படுவது இவரால் தான்.அதற்காக இவர் ப்ளூ கிராசர் அல்லர் உயரிய ப்ளாக் கிராசர்.இஸ்லாமியர்களை அப்படித்தான் குறிபிடுவோம்.இரவு நேரத்தில் கோடுபோட்ட அன்றாயர்யுடன் பத்து நாய்கள் புடைசூழ நாடா கட்டிலில் படுத்திருபதே ராஜ கலை தான்.

சரி என்று பிற்பகல் பண்ணிரெண்டு மணிக்கு கழுதைக்கு வைத்தியம் பார்க்க முடிவு செய்து புறப்பட்டார். நான் இல்லை என்று அடம்பிடிக்கும் கழுதையை ஏதோ பேசி பாடுபட்டு இழுத்து சென்று வைத்தியம் பார்த்தார்.அருகில் உள்ள டீ கடையில் இரண்டு பழங்களை வங்கி போட்டு விட்டு காலில் கட்டுடன் நடந்து செல்லும் கழுதையை வெற்றிக்களிப்பில் வெகு நேரம் பார்துகொண்டிருந்தார்.சுல்தான் பாய் இஸ்லாமியராய் இருந்தாலும் அசைவம் விரும்பாதவராய் இருந்ததால் அவரையும் இலட்சியவாதிகளின் வரிசையில் தாராளமாய் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு முறை வைத்திய சாலையின் ஆய்வு கூடத்தில் குடுவை வெடித்து ஒரு கை மற்றும் முகம் கருகி போய் சட்டென்று விழுந்தவர் விருட்டென்று எழுந்தார் ஓரிரு நாட்களில்.முன்பே சற்று கருப்பாய் இருப்பார்,அதானால் பெரிய தாக்கம் ஒன்று இல்லை அவரிடத்தில்.இருந்தும் அதே வெண்நிற ஆடையில் பல நாய்கள் புடை சூழ நடப்பதே தனி அழகு.சிலருக்கு கோபத்தையும் சிலருக்கு பிரமிப்பையும் சிலருக்கு பரிதாபத்தையும் ஏற்படுத்தும்.நிறைகுடம் தளும்பாது என்பதை நிரூபித்தவராய் சலனமற்று நடப்பார்.சுல்தான் பாயின் ஒரே கை இருப்பு பூமார்க் பீடியும் சில பிஸ்கட்டுகளும். எப்பேர்ப்பட்ட கொடூரமான நாயும் ஓரிருமுறையாவது வால் அசைக்கும்.

ஊரில் அப்போது தெரு நாய்களுக்கு தடா விதித்தார்கள்.இதை கேள்விப்பட்டு கையில் லைசென்சுடன் அலைந்தவர், ஊரில் உள்ள எல்லா பெரும்பாண்மை நாய்களுக்கும் கட்டி விட்டார்.இதனால் சில பிரச்சனைகளுக்கும் ஆளாகப்ப்பட்டார்.எல்லா தரப்பு மக்களும் தெரிந்ததனால் பிளைத்துகொண்டர்.ஊரில் உள்ள பெரும்பாண்மை நாய்களை காப்பாற்றிய சாதனையால் இரவு சாப்பாட்டை ரத்து செய்தார்.காரணம் சாப்பாட்டுக்கு வைத்திருந்த பணம் லைசென்சாக மாறியது தான்.அவரின் கண் உறங்கினாலும் உதடு பூமார்க் பீடியை புகைத்து கொண்டு தான் இருக்கும்.

அப்போது மழைக்காலம், முப்பத்தி ஐந்து வயது செல்லியம்மா பள்ளிகூடம் ஒன்றில் சத்துணவு சமைப்பவள். மஞ்சள் காமாலையால் துடிதுக்கொண்டிருந்தாள்.வசதி குறைவால் கவனிக்காமல் விட்டுவிட்டர்கள்.படுத்த படுக்கை.பத்து வயது மகனுடன் என்ன செய்வாள் பாவம். அடுத்த நாள் ஊர் பெருசுகள் ஒன்று கூடி செலவுகளை வசுவுகளோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியில் இருந்தபோது, உள்ளே நுழைந்தார் சுல்தான் பாய். தான் செய்து வைத்திருந்த நாட்டு மருந்தை சோதிக்க சரியான நேரம் பார்த்து காத்திருந்தவராய் களத்தில் இறங்கினார்.சிறிய பால் காகிதத்தில் சுருட்டி வைத்திருந்த மருந்தை பிதுக்கி செல்லியம்மா நாக்கில் தடவினார்.கொஞ்சம் தண்ணீரையும் வாயில் ஊற்றி படுக்க வைத்தார். மறுபடியும் கட்டிலில் சாய்ந்தாள் செல்லியம்மா.எல்லோரும் கைவிரித்தபடி கலைந்தனர்,சுல்தான் பாயும் பவிளியன் திரும்பினார்.இரண்டு நாள் வெளியூர் சென்று திரும்பியவர் சுல்தான் பாய் ஊர் திரும்பிய போது வழியில் செல்லியம்மாவை பார்க்க அவர் வீட்டிற்க்கு சென்றார். பாய்க்கு வெற்றி.மருந்து வேலை செய்திருந்தது. அன்று தான் முதல் பவுண்டரி அடித்த களிப்பில் வீட்டில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் விருந்து.அப்போது முதல் இப்போது வரை மஞ்சள் காமாலைக்கு பாய் தான்.பக்கத்து கிராமங்களிலும் சுல்தான் பாய் பிரபலம்.

தனது ஆராய்ச்சியை முடுக்கி விட்டபடி வைத்திய சாலையில் மும்முறமானார். சில மாதங்களில் பல நாட்டு மருந்துகளை தயார் செய்து வைத்திருந்தார். இவர் ஆராய்ச்சியில் கால் நடைகளுக்கான மருந்துகளும் உண்டு.பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது போல் பாத்திரம் அறிந்து வைத்தியம் செய்வார்.கால்நடைகளுக்கு எப்போதும் இலவச மருத்துவம் தான்.இப்போதெல்லாம் சுல்தான் பாயை பார்ப்பதே அரிதாகிவிட்டது.வைத்திய தொழிலில் சற்று முழு ஈடுபாட்டுடன் இருந்தாலும் இன்றும் அவருடைய ஒரே கவலை, ஊரில் உள்ள வாயில்லா ஜீவன்களுக்கு யார் வக்காலத்து வாங்குவது என்பதுதான்.இப்போதும் தன் கடமையாய் வீட்டில் இருபது நாய் உட்பட ஐம்பத்துக்கும் மேற்பட்ட ஜீவன்களுக்கு வாழ்வளிக்கிறார்.அறிந்து செய்தாலும் அறியாமையால் செய்தாலும் மனித நேயத்துக்கு பொருள் ஒன்று தான் மனிதனானாலும் சரி மிருகம் ஆனாலும் சரி.

நாம் கதைகளிலும், கட்டுரைகளிலும் காமராஜர்,காந்திஜி,காயிதே மில்லத்,பெரியார் என்ற நீண்ட, தெரிந்த பட்டியலையே படித்துக்கொண்டு இருக்கிறோம்.சக மனிதனிடமிருந்தும் கற்றுக்கொள்ள துடிக்கும் யாவருக்கும் சுல்தான் பாய் ஒரு பாடம் தான் மனிதம் நிறைந்த நேயத்தில்.நாமும் நேசிப்போம்.

"அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு"

No comments:

Post a Comment