என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

26 January 2011

பயணம்(4) - நைஜீரியா

லாகோஸ், நகரம் நைஜீரியா: 2009' டிசம்பர் மாதம் பதினாறாம் தேதி இரவு எட்டு மணிக்கு தரை இறக்கப்பட்டோம். சுமார் ஒன்பது மணி நேர பயணம். ஆனால் (எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்) அமீரக விமான சேவையால் களைப்பு தெரிய வில்லை. என்னோடு இணைந்து எங்கள் நிறுவனத்தின் மேலாளர் ஒருவரும் பயணித்தார். அவர் பயணம் செய்யும் இரண்டாவது ஆப்ரிக்க நாடு.  இரண்டு வருடங்களுக்கு முன்பு சோமாலியாவிற்கு சென்ற அனுபவம் உள்ளதாக கூறினார்.
விமானம் தன் பயணம் முழுவதும் எங்கள் பயண அனுபவங்களை பகிர்வதொடு பறந்தது. விமானத்தில் பரவலாக மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. வியாபாரத்திற்காக செல்லும் ஆசியர்கள் மற்றும் இதர ஆப்ரிக்க நாட்டு மக்களும் நிறைந்திருக்க,
அவரவர்களுக்கென்று தனித் திரையில் திரைப்படங்கள் செய்திகள் என்று வழங்கிக் கொண்டிருந்தது விமான சேவை.

நைஜீரியா மிகவும் பிரபலமடைந்த நாடு. எண்ணெய் வளம் மிகுந்த நாடு. ஆப்ரிக்க வரைபடத்தில் லேசாக மின்னும் நாடு நைஜீரியா. மற்ற ஆப்ரிக்க நாடுகளை விட பொருளாதாரத்தில் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது. ஒரு டாலருக்கு நூற்று ஐம்பதி இரண்டு நைராக்கள். நைரா என்பது நிஜீரியாவின் தாள் நாணயம். நைஜீரியாவிலும் திருட்டு மற்றும் கொள்ளைகள் சகஜமான ஒன்று. அதுவும் வெளிநாட்டவர்களின் கடவுச்சீட்டை களவாடினால் அவர்களுக்கு பெரும் லாபம். பயணிகள் விழித்துக் கொண்டிருப்பது அவசியமானதாக உள்ளது. நைஜீரியாவின் தலைநகரம் அபுஜா. வழக்கம்போல் வர்த்தகத்திற்கான நாகரமாய் திகழ்வது லாகோஸ். இந்தியாவில் மும்பை போல.

லாகோஸ் நகரம் வந்தடையும் நேரம் நிமிடம் வினாடிகள் உட்பட துல்லியமாக அறிவித்தது விமான ஒலி பெருக்கி. விளக்கொளி எழுப்பி தேநீர் கொடுத்து துயில் எழுப்பப் பட்டோம். தேநீரால் கலைக்க படாத தூக்கம் விமானம் தரைதட்டும் வரை தொடர்ந்தது. இளைப்பாற இறங்கும் பறவை போல தரை இறங்கியது நாங்கள் பயணித்த விமானம்.

எங்களுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனம் செல்வாக்குடையது என்பதால் எங்களை வரவேற்க விமான நிலையத்தில் பணிபுரியும் ஒரு நைஜீரியப் பெண்மணியை அனுப்பி இருந்தது. அவள் எங்களை எந்த சோதனையுமின்றி எங்கள் உடைமைகளுடன் சேர்த்து தள்ளிக்கொண்டு போனாள். வெளியே உயரமான ஒரு நிஜீரிய குடிமகன் எங்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றார். தொடர்பு கொள்ள வசதியாக இரண்டு கைபேசிகளையும் வழங்கினார். நன்றி உரை முடிந்ததும் ஒரு நான்கு சக்கர வாகனம் எங்களையும் எங்கள் பெட்டிகளையும் ஏற்றிக்கொண்டு தங்கும் விடுதியை நோக்கிப் பயணித்தது. எண்ணெய்யே தெய்திராத ஏழைச் சிறுவனின் சிகை போல காட்சி அளித்தது அந்த முக்கிய தார் சாலை. பல குண்டு குழிகளுக்கிடயே பல வாகன நெருக்கடியில் சிக்கி ஒரு வழியாக தங்கும் விடுதியை வந்தடைந்தோம். நங்கள் வந்திறங்கியது இரவு நேரத்தின் முதல் பகுதி என்பதால் வாகன ஓசை கரும்புகை என எல்லாவித மாசுகளுடனும் கூடிய இரண்டு மணிநேரப் பயணமாய் இருந்தது. தெருவெங்கும் கரிய பெரிய இரும்பு கதவுகளோடு காட்சி அளிக்கிறது வீடுகளும் விடுதிகளும் இதுவும் பாதுகாப்பு கருதியே.

தங்கும் விடுதியின் பெயர் வின்செஸ்டர். சுத்தமாக வைக்கபடிருந்தது ஓரளவு நிம்மதி அளித்தது. இங்கும் ஆங்கில மொழி பிராதானமாக உள்ளது. அரசு அங்கிகாரம் பெற்ற மொழியும் கூட. இதற்க்கு முக்கிய காரணம் இதுவும் ஆங்கிலேயர்களின் காலனிகளில் ஒன்று என்பதால். இங்கு வாயிற்காப்பாலன் முதல் தெருவில் பழங்கள் விற்கும் சாதாரணப் பெண் வரை அனைவரும் ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் பேசுவதை நான் காணவில்லை அல்லது கவனிக்க வில்லை.

இங்கு உணவாக கோழிகள், மாட்டிறைச்றைசிகள்,  அரிசி, சோளத்தில் தயார் செய்யும் பொங்கல் போன்ற உணவு, பெரும்பாலும் உருளைக் கிழங்கு, கடலோரப் பகுதி என்பதால் மீன்களும் பீன்ஸ் வகை தானியங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு சைவ உணவென்றால் அதில் நத்தை கிடக்கும். நத்தைக்கு இரத்தம் இல்லாதது தான் அதனை சைவ உணவானதர்க்கு காரணமாக சொல்லப்படுகிறது.  எல்லா உணவகங்களிலும் பீர் குப்பிகள் கிடைக்கின்றன. பெரும்பாலான பெண்கள் பீர் அருந்துவதை பரவலாக காண முடிகிறது. கலாச்சாரத்திலும் ஐரோப்பிய நாடுகளையே பின்பற்றுகின்றனர்.

அடுத்த நாள் காலை எழுந்தாயிற்று கடன்கள் கழித்து உணவு விடுதிக்கு சென்று கிடைத்தை அருந்தி விட்டு அலுவல் காண ஆவலானோம். ஒரு வேலை உணவு சுகமாய் முடிந்து அலுவலகம் சென்றால் ஏதோ அதிர்ச்சி. அது புதிதாக துவங்கப்பட்ட ஒரு இனைய சேவை புரியும் நிறுவனம். நம் நாட்டில் இனைய சேவை நிறுவனம் என்றால் டைடல் பார்க் போன்ற தகவல் தொடர்பு பூங்காக்களின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும். அவர்களின் அலுவலகம் ஒரு சிமெண்ட் சீட்டின் கீழ் அமைந்திருந்தது. உள்நுழைந்ததும் எங்களை வரவேற்றது ஒரு பெண் குரல், அவள் வரவேற்ப்பாளராக பணிபுரிகிறாள். முகப்பு கதவை திறந்து மேலும் உள்நுழைய உதவினாள். அலங்கரிக்கப்படாத உட்பகுதி பழைய வீடுகளில் உள்ள மண்சுவர் போன்ற சுவர்கள் லேசான மரவாசனையோடு வரவேற்றது. வந்த வேலையை செய்து விட்டு மதிய உணவிற்கு தயாரானோம். இப்போது உண்பதற்கு என்ன கிடைக்கும் எனும் பொதுவான பிரச்சனை எழுந்தது. நிச்சயதார்த்தம் முடிந்து திருமண தேதியை எதிர் கொண்டும் அதற்காக விரதம் மேற்கொண்டு இருந்தேன். உடன் வந்தவரோ கோழி முட்டை தவிர வேறு எதுவும் உண்ணும பழக்கமற்றவர்.  அசைவத்தை தவிர்க்க முடியாமல் கோழி கால்களும் சில முட்டைகளும் உடைக்கப்பட்டிருந்தன. விரதமும் தற்காலிகமாக கலைக்கப்பட்டன.

வேலை முடிந்ததோ இல்லையோ மாலை ஐந்து மணிக்கெல்லாம் கதவுகள் மூடப்படுகின்றன. வாகன நெரிசல்கள் மிக அதிக அளவில் இருக்கிறது. இதற்கு காரணம் பொதுவாக வாகனம் வாங்கும் வசதிகள் குறைவாக இருந்தும் நிறைய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதே. பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பல கைகள் மாறி பத்தாவது கையாய் வாங்கப்படுகிறது நிஜீரியாவில். எல்லா வகை வாகனங்களும் காணப்படுகின்றன. இந்த காட்சிகளை காணும்பொழுது எனக்கு ஒன்று சொல்லத்தோன்றுகிறது. கார்கள் உட்பட பல வாகனங்கள் பிறப்பது எந்தா நாடக இருந்தாலும் இறப்பது இங்கு தான். பொது மக்கள்  போக்குவரத்திற்கான வாகனங்கள் வேன் போன்ற வாகனங்களே. வாகனத்திற்குள் இருக்கை களுக்கு பதிலாக மரப் பலகை இடப்பட்டு ஓட்டபடுகிறது. இவைகளை பார்க்கையிலே இந்தியா போக்குவரத்தில் எங்கோ போய்விட்டதாக தோன்றுகிறது. இங்கு மாமாக்களான காவல் அதிகாரிகள் தான் மிக ஆபத்தானவர்கள். இங்கும் லஞ்சம் தலைவிரித்து காபரே ஆடுகிறது. பத்து இருபது டாலர்களுக்கு ஆடு மாடுகளோடு சேர்த்து மனிதர்களும் கொல்லப்படுவது சகஜமாக சொல்லப் படுகிறது. நமது ஊர் காவல் அதிகாரிகள் போல சாக்குகள் சொல்லி பணம் பறிக்காமல் நேராகவே பத்து டாலர்கள் கொடு அல்லது உனக்கு அபராதம் விதிக்கப்படும்(இரண்டுக்கும் வேறுபாடு காண முடியவில்லை) என்று அச்சுருத்தியே பணத்தை பிடுங்கி செல்கிறார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் (சீனா மற்றும் இந்திய வாகனங்கள்) குறுக்கவும் மறுக்கவும் ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக லாகோஸ் நகரம் பாலடிக்கப்பட்ட நகரம். நகரமே குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. லாகோஸ் நகரத்தில் தான் நேரடியாக கருப்பின மக்களோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. விக்டோரியா தீவு குறிப்பிடத்தக்க தீவு. அழகான கடற்கரை மேலும் இந்திய உணவகங்கள் சில மற்றும் ஒரு திரையறங்கும் உண்டு. ஏற்கனவே இனைய தொடர் அரட்டை மூலம் பழக்கப்பட்ட தொழில் சார்ந்த தமிழ் நண்பர் ஒருவரை காணும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய தமிழர்கள் லாகோஸ் நகரத்தில் பரவிக் கிடப்பதாக அவரிடமிருந்து அறிந்தேன். எங்கு காணினும் இறை பொறுக்கும் புறாக் கூட்டமென கால் பந்தை போட்டு உதைத்துக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள் வயது வித்தியாசமின்றி.

நைட் லைப் என்று சொல்லப்படுகின்ற நைஜீரிய மக்களின் இரவு நேர வாழ்க்கை குறித்து, என்னுடன் வந்த மேலாளருக்கு இருந்த ஆர்வம் மற்ற தொழில் தோழர்களுக்கு தெரியப்படுத்த பட்டது. எங்கள் பாதுகாப்பிற்கு ஒருவர் அனுப்பப்பட்டார். நைட் கிளப் என்று சொல்லப்படுகிற ஒரு விடுதிக்கு சென்றோம். அங்கு ஆண்களும் பெண்களும் தீப்பொறி பறக்க நடமாடிக்கொண்டு இருந்தார்கள். எங்கள் இருவரை தவிர மற்ற அனைவரும் ஆபிரிக்கர்கள் அல்லது நைஜீரியர்கள்.  பாதுகாப்பிற்கு ஆட்கள் இருந்தாலும் லேசான பயத்துடனேயே செல்ல வேண்டி இருந்தது. பெரும்பாலும் அனைவர் கையிலும் ஒரு குப்பியும் இன்னொரு கையில் பெண் அல்லது ஆண்னின் கையும் இருந்தது. எங்களுக்கென இருகைகள் தேடும் பொழுது சுத்தமான இருக்கைகளை காண்பது அரிதாக இருந்தது. பெரும்பாலும் கிழிந்த மற்றும் மிகப் பழைய இருக்கைகளே காணப்பட்டன. ஒரு குப்பி பீர்குப் பின் கிளம்பினோம். உடன் வந்த மேலாளர் நண்பர் அதிருப்தி அடைந்திருப்பது அவர் முகமும் பேச்சும் தெளிவாக காட்டியது. இரவு பண்ணிரண்டு மணி இவரை திருப்தி படுத்துவதாய் வேறு ஒரு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு மேலும் சில சகோதரர்கள் எங்களுடன் இணைந்து கொண்டனர் அந்த நிறுவனத்தின் சார்பில்.  அங்கு வாயிற் காப்பாளனோடு ஏற்பட்ட தகராறில் முடிவு மாற்றப்பட்டது. கார்கள் பின்னோக்கியும் முன்னோகியும் மாறி மாறி சென்றதன் விளைவு மறு நாள் காலை தெரிந்தது. வழியில் போகும் வரும் காவல்காரர்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என்று எல்லோரிடமும் சண்டையிட்டு வந்து அடைவதற்குள் நாங்கள் நாடு கடத்தப்பட்டவர்களாய் உணர்ந்தோம். வேறு நாடு அதுவும் ஆப்ரிக்க நாடு எங்கள் இருவர் தவிர வேறு இந்தியர்கள் காணப்படவில்லை அந்த நள்ளிரவில், என்பது எங்களுக்குள் பீதியை கிளப்ப, மேலாளர் தனக்கு தலை சுற்றுகிறது என்று பொய் சொல்லி விடுதிக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்தார். ஒரு வழியாக உளறிக்கொண்டே கார் விடுதியை வந்தடைந்தது. இதற்க்கு முன் எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத அனுபவம். காலை மேலாளர் துயில் எழுக நேரம் ஆகிற்று. இனி எங்கும் இம்மாதிரி ஆசை படமாட்டேன் என்று உறுதி மொழி உதிர்த்த பிறகே படுக்கையிலிருந்து எழுந்ததாக கூறினார். மேலும் ஒரு வார காலம் முடிவடைந்த நேரத்தில் விக்டோரியா தீவு, கடற்க்கரை, மரச்சிற்ப அங்காடிகள் என சுற்றி முடித்தாகி விட்டது.

அந்த பத்து நாட்களில் மனதில் நின்றது தொழில் சார்ந்த உதவியாளர்கள் மூவரும். எந்த உயர்ந்த கோபுரதிலும் சாதாரணமாய் ஏறும் திறன் கொண்டவர்கள். தொழில் நுட்ப ரீதியாக எதையும் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். அதற்க்கு முக்கிய காரணம் அவர்களின் ஆங்கில அறிவு என்றே சொல்லத்தோன்றுகிறது. இதற்க்கு முன் சென்ற மூன்று ஆப்ரிக்க நாட்டிலும் இந்த அளவுக்கு தொழில் நுட்பம் தெரிந்த அல்லது புரிந்து கொள்கிற ஆப்பிரிகர்களை காணும் வாய்ப்பு அமையவில்லை. மற்றவர்களை ஒப்பிட்டால் நிஜீரியர்கள் கொஞ்சம் தெளிவானவர்கள் என்று சொல்லலாம்.

தொழில் சார்ந்த பயணம் மகிழ்ச்சி அளித்தது. வெற்றிகரமாக முடிந்தது. மூட்டை முடிச்சுகளை தூக்குவதற்க்கான சமயம். பத்து நாட்கள் கழிந்தது திரும்பி செல்வதற்கான பயணச் சீட்டும் தயாராக இருந்தது. ஒரு வழியாக அனைவரிடமும் விடை பெற்ற பிறகு எங்களுக்காண காரின் சக்கரம் சுழல ஆரம்பித்தது. நாங்கள் பயணம் செய்யப்போகும் விமானம் மாலை ஆறு மணிக்கு. ஆனால் பண்ணிரண்டு மன்னிக்கே விமான நிலையத்தில் கொண்டு வந்து விடப்பட்டோம். என்ன செய்வது விமான நிலையத்தில். விமான நிலையம் சற்று சிறியது. துபாய் விமான நிலையமென்றால் சுத்தமான இருக்கைகள் இலவச இனைய சேவை, நல்ல உணவகங்கள், சுங்க வரி விலக்கு அங்காடிகள் என்று விசாலமாய் இருக்கும். லாகோஸ் விமான நிலையத்திலோ ஓரிரண்டு சிறிய உணவகங்கள் மட்டுமே இருந்தது. இருக்கைகள் பத்தாது பல பயணிகள் நிற்க்க வேண்டியதாயிற்று. மேலும் கண்ணில் பட்ட காட்சிகள் சில: எங்கள் பயண மூட்டைகளோடு இருக்கைகாக வேண்டி காத்திருக்க, ஒரு ஓரத்தில் ஒரு நிஜீரிய ஆணும் பெண்ணும் இடையே காற்று கூட நுழையமுடியாத அளவு நெருக்கத்தில், அந்த பெண் அந்த ஆணின் கன்னத்தின் பருக்களில் இருந்து வெளிவரும் பிசுருகளை தனது பல்லால் எடுக்கிறாள், இரு நிஜீரியா குழந்தைகள் நமக்கு புரியாத ஆங்கிலத்தில் சண்டையிட்டு கொள்கிறார்கள், வயாதான பெண் குழந்தைகளை கட்டுபடுதுகிறாள், ஒரு பாகிஸ்தானிய பெரியவர் தனது கைபேசியின் மூலம் தன் பயண விவரத்தை உருதுவில் யாருக்கோ சொல்கிறார், சிகை இல்லாத ஒரு கருப்பிணப் பெண் கையில் பைகளும் முதுகில் குழந்தையும் சுமந்தபடி தனக்கான வரிசை தேடி செல்கிறாள், உணவகங்களில் பெண்கள் மும்முரமாக வேலையில் இருக்கிறார்கள். விமானம் தரை இறங்கிய செய்தியை ஒலிபெருக்கி மூலம் அறிவித்து கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக பசி லேசாக கிள்ளியது உணவகம் சென்று ஜ்வேல் ஆஃப் ரைஸ் என்று சொல்லபடுகிற சைவ உணவும் நாவிர்காக ஒரு ஆரஞ்சு பழ சாரும் எடுத்துக்கொண்டோம். விமானம் ஏறும் வரை குமட்டுவது நிருத்தவில்லை. இந்த குமட்டுதளிலும் ஒரு இனிய நிகழ்ச்சி. எங்களை வரவேற்க வந்த அந்த கருப்பினப்பெண் அவள் பெயர் மறந்துவிட்டது எங்களை வழி அனுப்பவும் வந்திருந்தாள். விமானத்திற்காக காத்திருக்கும் சமயம் நான் மட்டும் தனியே அமர்ந்து கொண்டு கைபேசியின் ஊடக இயக்கியில் "ஜெய்ஹோ"வை ரசித்துக் கொண்டிருந்தேன். என்னை சரியாக அடையாளம் கண்டு கையசைதுக் கொண்டே வந்து அருகே அமர்ந்தாள். இடையில் தனது கிராமத்திற்கு சென்று விட்டதாகவும் அதனால் எங்களை சந்திக்க முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தாள். என் உடன் வந்த மேலாளர் வரும் வரை காத்திருந்து அவரிடமும் வருத்தம் தெரிவித்த பின் எங்கள் உடைமைகள் பற்றிய விபரங்கள் தெரிவித்து பின் விமானம் வந்தடையும் வரை உடன் இருந்தாள். நல்ல உபாசார குணம். அவளோடு பேசிய அந்த முப்பது நிமிடமும் அவளின் வாழ்வாதாரம் பற்றியும் தனது குடும்பம் பற்றியும் தான் இருந்தது. பின்னர் அவள் விடை பெற்று செல்லும் பொழுது பின்னனியில் கருத்தம்மாவின் போறாலே பொன்னுதாயி பாடல் ஒலித்தது எனது ஊடக இயக்கியில். இப்போது கூட....

ஒரு வகையில் தொழில் ரீதியாக வெற்றிப்பயணம் என்றாலும் சில சம்பவங்கள், சில சங்கடங்கள் தவிர்க்க இயலவில்லை. இறைவனுக்கு நன்றி கூறி விமானத்தில் அமர்ந்தாகிவிட்டது அடுத்த பயணத்திற்காக. அடுத்த பயணத்தில் சந்திப்போம் மீண்டும் ஒரு பின்னணி இசையோடு.

அடுத்த பயணம் காங்கோவில்.......
(பயணம் தொடரும்)


No comments:

Post a Comment