என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

25 August 2010

பயணம்(2) - தான்சானியா


நைரோபியிலிருந்து தொடர் பயணமாய் தான்சானியாவின் தர்-எஸ்-சலாம். நைரோபியிளிருந்து ஒன்னேகால் மணி நேர விமானப் பயணம். தர்-எஸ்-சலாம் கடலோர பகுதி என்பதால் அழகும் அதே நேரம் வெப்பம் நிறைந்த பகுதியும் கூட. சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆப்ரிக்க நா(கா)டுகளில் முக்கியமானதாக விளங்குகிறது தன்சானியா.

கலைப்பில்லாத சிறிய பயணம். விமான நிலையம் இறங்கியவுடன் ஐம்பது டாலர் கொடுத்து விசா வாங்கியாகிவிட்டது. என்னை அழைத்து கொண்டு போக காத்துக்கொண்டிருந்த நண்பர் மற்றும் தொழில் தோழரோடு கைக்குலுக்கி கிளம்பினேன் தன்சனியாவின் காற்றை சுவாசிக்க. நான் தர்-எஸ்-சலாமை அடைந்த நேரம் கதிரவன் கரை இறங்கிவிட்டதால் நாங்கள் செல்லும் சாலை தவிர வேறொன்றும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பயண புராணத்தை தொழில் தோழரோடு பகிர்ந்து கொண்டே செல்ல, தங்குமிடம் வந்து சேர்ந்தது.

ஒரு பெரிய இரும்புக் கதவு கிரீச் என்று திறக்க உள்ளே நான்கு வீடுகள் கொண்ட இரண்டடுக்கு கட்டடம். மதில் சுவர் ஓரமாய் ஊதாப் பூக்கள், அருகருகே சிவப்பரலி மற்றும் செம்பருத்தி செடிகள், வாயிர்கதவருகே ஒரு சிறிய குடிசை(வாயிற்காப்பவன் குடியிருப்பு), தெருக்கள் நிறைய வேப்பமரங்கள். இம்முறை விடுதியில் தங்க வைக்கப்படவில்லை. மாறாக என் தொழில் தோழரின் மாடி குடியிருப்பில். முதல் ஒரு வாரம் காலை மற்றும் மாலை வேலை உணவு அவர் வீட்டில் தான். நல்ல வடகிந்திய சைவ உணவு அவர் சொந்த ஊர் டெல்லி என்பதால்.

இரண்டு படுக்கை அறை ஒரு சமையல் அறை கொண்ட வீடு. ஒரு சிறிய தொலைக்காட்சி உள்ள அறையை தேர்வு செய்து படுக்கை விரித்தேன். இரவு உணவிற்குப்பின் உறக்கம் வராமல் தவித்த நேரம் குளிரூட்டி தட்டிவிட்டு தொலைகாட்சியை தொல்லை செய்தேன். அலைவரிசைகளை மாற்றி மாற்றி ஒய்ந்த பிறகு கடைசியில் தென்பட்டது ஒரு மலையாள அலைவரிசை. மம்முட்டியும் மோகன்லாலும் மாறி மாறி கதாநாயகியுடன்  நடனமாடிக்கொண்டிருக்க நான் உறங்கிப்போனேன். அடுத்த நாள், காலை கடன்கள் மற்றும் மலையாள செய்திகளுக்குப் பின்னர் சிற்றுண்டி முடித்து அலுவலகம் கிளம்பினோம். காரில் அமர்ந்த நேரம் வாயிற்கதவை திறக்க வந்த காப்பாளன் ஒரு தான்சானிய பிரஜை. பள்ளிக்குச் செல்லும் வயது. வறுமை கோட்டை தாண்ட விடாமால் பாம்பு கொத்த பரமபதம் ஆடிக்கொண்டிருக்கிறான்.

போகும் வழியில் ஜல்லிகள் பெயர்ந்த தார் சாலைகள் காணப்பட்டாலும் நெடுஞ்சாலை மட்டும் நன்றாக இருந்தது. பெரும்பாலும் மண்சாலைகள் தானாம் கேட்டறிந்துகொண்டேன். எட்டு மணிக்கு மேல் உடற்பயிற்சிக்காக காலை நடை போடும் ஆபிரிக்கர் அல்லாத வேற்று நாட்டுப் பெண்கள். நெடுஞ்சாலையில் வண்டிகள் நின்றவுடன் செய்தித்தாள் மற்றும் கைப்பேசி கட்டணம் ஏற்றிக்கொள்ள துண்டு சீட்டை ஏந்திக்கொண்டு  ஓடி வரும் இளைஞர்கள், வயோதிகத்திலும் பழங்கள் விற்க்கும் கிழவிகள், குழந்தையை முதுகில் சுமந்தபடி பெரிய பெரிய பைகளை சுமந்து செல்லும் பெண்கள் என்று சாதரணமாய் உணரமுடிகிறது அவர்களின் வாழ்வாதாரம்.

அங்குள்ள திருடர்கள் மற்றும் கொள்ளையர்களை விட காவல்துறை மிகவும் ஆபத்தானது என்றும். தனியே வெளியில் சென்று மட்டிக்கொள்ள வேண்டம் என்றும் தான்சானியா செல்லும் முன்னரே நான் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தேன். பொதுவாக ஆப்பிரிக்காவில் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியில் செல்லகூடாது என்பதும் உரிய துணை இல்லாமல் சாலையில் நடக்ககூடாது என்பதும் அங்கே வருபவர்களுக்கு அறிவுரை சொல்லப்படுவதுண்டு. ஆனால் கார் வைத்திருக்கும் அனைவரும் எந்த நேரத்திலும் வெளியில் சென்று வருவதற்கு தடைகள் குறைவு. நினைவில் ஒரு சிறிய சம்பவம். முதல் நாளே என் தொழில் தோழர் காரில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு வரும் வழியில் ஒரு காக்கி நிற ஆசாமி கையில் துப்பாக்கியுடன் காரை நிறுத்தி எல்லோரிடமும் கடவுச்சீட்டை(பாஸ்போர்ட்) காண்பிக்கும் படி வற்புறுத்தினான். நல்ல வேலையாக என்னிடம் கடவுச்சீட்டும் மற்றவர்களிடம் பணியுரிமையும் வைத்திருந்ததால் மேற்கொண்டு பணம் கேட்டு தொந்தரவு செய்யவில்லை. இல்லை என்றால் காவல் நிலையம் கூட்டிகொண்டு போய் சம்மந்தபட்டவரிடம் ஆயிரம் டாலர் வரை கறந்து விடுவார்களாம்.  இதற்க்கு முழுக்க காரணம் சராசரி வருமானம் தரப்படாதது என்கின்றனர் நாட்டின் அக்கறையாளர்கள். (ஆப்ரிக்காவிலும் மாமாக்கள் இருப்பார்கள் போல). அவர்களின் நாகரிகமும் பழக்க வழக்கமும் சில விஷயங்களில் வியக்க வைக்கிறது. எதிரில் செல்பவர் புதியவர் என்றாலும் வணக்கம் கூறிவிட்டு தான் செல்கிறார்கள் வயது வித்தியாசம் இன்றி. ஏதேனும் பொருட்களோ உதவியோ பெற்றுக்கொண்டால் நன்றி சொல்லிக் கொள்கிரார்கள். இதை நம் நாட்டில் பெரும்பாலும் தென்படாத விஷயம். ஆனால் அவர்கள் தனது சொந்த மொழியில் விடைபெறும்போது நன்றி சொல்லி கொள்கிறார்கள். . இன்னொரு ஆச்சர்யம், அங்குள்ள தொந்நூறு சதவிகிதம் மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்களின் தேசிய மொழி சுவஹைலி. அதிகாரபூர்வமான மொழி ஆங்கிலம் மற்றும் சுவஹைலியே ஆகும். நான்கு தான்சாநியர்கள் இருந்தால் சுவஹைளியில் பேசிக்கொள்கிறார்கள், கூடவே ஒரு வெளிநாட்டவர் இருந்தால் அனைவரும் ஆங்கிலத்திற்கு தாவி விடுகிறார்கள். இது பல மேலை நாடுகளில் பின்பற்றும் கலாச்சாரம். இதுவும் கூட இந்தியாவில் காணப்படுவது குறைவு.

இப்போது அங்குள்ள நமது வியாபார நிறுவன சகாக்களுடன் ஒரு குட்டி சந்திப்பு. நிர்வாக குழுவில் இருப்போர் பெரும்பாலும் இந்தியர்களே. அதனால் தானோ என்னவோ அவர்களுக்கு ஆசியர்கள் மீது ஒரு சிறிய கோபம் குறிப்பாக இந்தியர்கள் மீது. அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன் வெள்ளையர்களால் கூட்டிசெல்லப்பட்ட வட இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் அங்கு பெரும்பாலும் காணப்படுகிறார்கள். தலைமுறை தலைமுறையாக அங்கேயே வாழ்கிறார்கள். சந்திப்பு வெற்றிகரமாக முடிந்து மதிய உணவிற்கு சென்றோம். அங்கு நான்கைந்து இந்திய உணவகங்கள் உள்ளன. அதில் இரண்டு குஜராத்தி உணவகங்களும் ஒரு கேரள உணவகமும் அடக்கம். இந்திய உணவிற்கு சற்றும் குறைவில்லை. இருந்தும் எனக்கு கிடைத்தது சுத்த சைவ வீட்டுனவு. நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் அன்றோ. அங்குள்ள உள்ளநாட்டு வாசிகள் பெரும்பாலும் உண்பது பொரிச்ச கோழியும் உருளையும், அது தவிர பீன்ஸ் மற்றும் இதர வகை தானியங்களையும்.

சம்பிரதாயமாக அன்றிரவு அணைத்து சகாக்களுடனும் ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு வீட்டிற்கு திரும்பியாகிவிட்டது. அந்த வாரம் முடிந்து விட்ட நிலையில் சனி ஞாயிறில் கடற்கரை, இந்து கோவில்கள் என்று சுற்றிவிட்டு சேவல் கூட்டில் அடைவது போல அடைந்து கொண்டேன். ஆச்சர்யம் என்னவென்றால் அங்கு நிறைய இந்து கோவில்கள் உண்டு. சிவன், பெருமாள், முருகன், ஆண்ஜிநேயர் சிலைகளும் காணப்படுகின்றன சாயிபாபா கோவிலும் உண்டு. தர்-எஸ்-சலாமில் சுமார் முன்னூறு தமிழ் குடும்பங்களும் ஒரு தமிழ்ச் சங்கமும் உண்டு. பொங்கல் தீபாவளி என்று எல்லா பண்டிகைக்கும் ஒன்று கூடுகின்றனர். பண்டிகைகள் அனைத்தும் வெகுவாக கொண்டாடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு பொங்கல் விழாவை காணும் வாய்ப்பும் கிடைத்தது.

ஒரு வாரம் முடிந்த நிலையில் என்னோடு அறையை பகிர்ந்து கொள்ள அங்குள்ள நிதி துறையின் மேலாளர் ஒருவர் வந்திருந்தார். அவரும் தமிழர் என்பதால் என் மகிழ்ச்சியின் சதவிகிதம் கூடியது. நன்கு சமைக்கும் திறன் உள்ளவர். நல்ல நட்பு பாராட்டினார். மூன்று வேலையும் நல்ல சைவ உணவு கிடைத்தது இப்படித்தான். தினமும் அந்த நாள் பொழுது எப்படி முடிந்தது என்ற கேள்விக்கு பதிலளிக்க, இரவு உணவு முடிந்து விடும். தொலைகாட்சியில் மலையாளம் படம் அல்லது கணினியில் தமிழ்த் திரைப்பட தகடு  ஓட அதைப்பற்றிய விமர்சனம் சொல்லப்படும். பிறகு தன்சானியா நாட்டின் சிறப்பு மற்றும் சிக்கல்கள் என எல்லாவற்றையும் அலசிவிட்டு லேசான குறட்டை சப்தமும் சேர்ந்து கொள்ள தூக்கம் தலை தூக்கும் எங்கள் இருவருக்கும்.

தான்சானியாவின் காடுகள் இன்னுமோர் சிறப்பு. வனங்களில் சுதந்திரமாக திரியும் விலங்குகளைப் பார்க்க பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். எனக்கும் அப்படி ஓர் சந்தர்ப்பம். நான் தன்சானியா சென்ற நேரம் கிறுத்துமஸ் சமயம். தொடர்ச்சியாக விடுமுறை ஊர் சுற்ற தோதுவான சமயம். தலைக்கு நூறு டாலர் என்று வசூலிக்கப்பட்டது. ஒரு பத்து குடும்பங்கள் அடங்கிய படையுடன் கிளம்பியது எங்கள் சிற்றூந்து கரும்புகையை உமிழ்ந்தபடியே. கிளம்பிய சில மணி நேரத்தில் வனப்பகுதியை தொட்டாகிவிட்டது. போக போக சாலையின் ஓரமாகவே ஒட்டகச்சிவிங்கி மேய்வதையும், பபூண் குரங்கு குடும்பத்துடன் பேன் பார்த்துக்கொள்வதையும் புகைப்படமாக மாற்றிகொண்டிருந்தது எனது புகைப்பட கருவி. உடன் வந்த குடும்பங்கள் பெரும்பாலும் தமிழ் பேசும் என்பதால் தமிழ் கூச்சல்களுடன் வந்து சேர்ந்தது வனத்தின் நுழைவாயில். நுழைவு சீட்டுகளுடன் உள்ளே நுழைந்தது சிற்றூந்து விலங்குகள் காணும் ஆவலுடன். மொத்தம் மூவாயிரத்து முந்நூற்று இருபது சதுர அடி கொண்ட காடு. இது தன்சாநியாவிலேயே மூன்றாவது பெரிய வனப்பகுதியாகும். சிங்கம், காட்டு நாய், காட்டெருமை, மான்கள், யானைகள், வரிக்குதிரை போன்றவற்றை எளிதாக காண முடிகிறது. ஆறுமணிநேர பயணத்தின் ஊடே பல அறிய நிகழ்ச்சிகள் புகைபடமாயின.
காட்டு பயணம் முடிந்து தொடர்சியாய் நாட்டு பயணம் சில இன்னல்கள் இருந்தாலும் ஓய்வெடுக்க உகந்த இடமாக படுகிறது தான்சானியா. மேலும் தான்சாநியாவின் இன்னொரு சிறப்பு கிளிமாஞ்சாரோ. அப்ரிகாவிலேயே உயர்ந்த சிகரம் கிளிமாஞ்சாரோ. அதன் கொண்டைபகுதியில் பனியுறைந்து இருப்பதையும் விமான பயணத்தின் போது காண முடியும். கிளிமாஞ்சாரோ செல்லும் வாய்ப்பை தவறவிட்டதில் மாபெரும் வருத்தத்தை உணர முடிகிறது என் அடி வயிற்றில் லேசான எரிச்சலுடன். கூடவே ஜான்ஜிபார் தீவும் அதை தொடும் படகு பயணமும் நெஞ்சை அல்லும் அழகு. ஒரு பெருமூச்சுடன் அடுத்த பத்திக்கு செல்கிறேன்.
முன்பணம் செலுத்தி மின்சாரம் வாங்குவது, பல்கலைகழகங்களில் பீர் விற்பது என்று சில வினோத விஷயங்களையும் பார்க்க முடிகிறது. மதுவகைகள் சாதாரண மளிகை கடைகளில் விர்க்கபடுகிறது. ஆப்ரிக்காவின் மீது தவறாக தூவப்பட்டு இருக்கிற கலாச்சார சீர்கேடுகள் நிறைய. நினைத்தவுடன் விவாகம் செய்வதும் நினைத்தவுடன் விவாகரத்து செய்வது, மிகச்சிறிய தொகை பணத்திற்காக கொலை செய்வது என்று ஒரு பட்டியல் நீள்கிறது. இவை நம் நாட்டிலும் நடக்கிறதென்றாலும் நமக்கு குறைவான மதிப்பெண் தான். ஆபத்துகள் இருந்தாலும் தான்சாநியாவின் அழகு மெச்சப்பட வெடிய ஒன்று தான்.

இம்முறை ஓரளவான தொழில் சார்ந்த வெற்றியுடன் விடை பெற நேர்ந்தது இரண்டு மாதங்களுக்கு பிறகு. நீண்ட நாள் தங்கியதில் மகிழ்ச்சி என்றாலும் திரும்புகையில் லேசான விசனம் தலைதூக்குகிறது. மீண்டும் அதே விமான பயணம் அதே விமான பணிப்பெண். இம்முறை ஓரளவு ஆப்ரிக்க முகங்கள் பழகி இருந்தது. ஒரு சிறிய கோப்பை சிவப்பு ஒயினின் வாசனையோடு என் சிறிய ஊடக இயக்கியில் இளையராஜா இசைத்து கொண்டிருந்தார். உணவிற்கு பின் லேசான உறக்கத்தில் இருந்த போது பணிப்பெண் குரல் அறிவித்தது இன்னும் சற்று நேரத்தில் விமானம் துபாயில் தரை இறங்க போவதாக. நள்ளிரவு பயணம் அசௌகரியத்தை ஏற்படுத்த துபாயில் தரை இறக்கப்பட்டோம் மீண்டுமொரு பயணத்திற்கான ஏக்கத்துடன்.

மீண்டுமொரு பயணத்தில் சந்திப்போம்...
பயணித்த நாடு சாம்பியா.

2 comments:

  1. Keep sharing this kind of experience, the narration and article was really good

    Regards
    Ramesh

    ReplyDelete
  2. Thanks Mr.Ramesh.... Its my pleasure to share my experience... I didn't get opportunity to travel since Nov 2010... Thanks once again for ur appreciation... i am happy that my article helped you.....

    ReplyDelete