என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

14 March 2009

கானல் நதி

இன்று சனி இரவு, வாரத்தின் கடைசி நாள் மற்றும் கடந்த கால வாழ்கையை அசை போடும் நாள். எல்லா சனி இரவுகளும் நண்பர்களோடு கழியும். இன்று நான் மட்டும் விரும்பியோ விரும்பாமலோ தனிமையில். காரணம் பிடிகொடுக்க முடியாமல் நழுவுகிறது. நண்பர்களின் புகைமூட்டமோ பீர் வாசணையோ போதையின் உச்சரிப்போ இல்லாத சனிக்கிழமை. இரு கைகளும் தலையணையாய், நெற்றிக்கு நேராய் சுழன்று கொண்டிருக்கும் காத்தாடியும், சுவர் கடிகாரத்தின் நொடி முள் சப்தமும் துணை இருக்க நான் மட்டும் தனிமையில் போகின்றேன் எட்டாண்டுகளுக்கு முன்பு.

அன்று என் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த முதல் நாள். கன்னியர் வாசம் வீசினாலே பத்தடி விலகி போகும் ஆடவர் கூட்டத்தில் நான். என் பாதி வாழ்வை பள்ளியில் தொலைத்து விட்டு மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்த சமயம். மலை மேல் முட்டிய மேகமாய் அவள். முட்டிய வேகத்தில் கலைந்து போனாள். நான் நகராத பாறையாய் மெய் சிலிர்த்து நின்றேன். என் நாசியிலிருந்து மூச்சுக் காற்று எட்டிப்பார்க்க சில நிமிடங்கள் ஆகிப்போனது. அவள் அழகு என் கண்தேடும் அழகிற்கும் என் மனம் தேடும் அழகிற்கும் இடையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் பிறகு தினமும் ஓரிரு முறையாவது என் கண்ணிலும் கணவிலும் கடந்து போனாள். அவளோ இறை தேடும் கோழிக்குஞ்சாய் அவள் பாதையில் போய்க்கொண்டிருந்தாள். இடையில் தேர்வுக்கடலில் மூழ்கி முத்தெடுக்க முயன்று கொண்டிருந்தேன்.

முதலாம் ஆண்டு தேர்வு முடிந்து மாதங்கள் ஓடி விட்டது. இரண்டாவது வருடம் தொடங்கி என்துறையில் சில பொறுப்புகளை ஏர்கலானேன். அவளும் என் துறைசார்ந்ததால் தினமும் பார்க்கும் சந்தர்ப்பம். தினமும் வரும்போதும் போகும்போதும் அவள் கண்கள் மட்டும் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தது. அவளுக்கு மட்டுமன்று துறையில் அனைவருக்கும் தெரிந்த முகமாய் நானிருக்க, ஒரு செய்முறை இடைத்தேர்வு. நான் செய்து முடித்து, விடைத்தாள் நிரப்பிக்கொண்டிருந்தேன் எனது பின்புறம் இருந்து என் பேர் சொல்லி அழைக்கும் ஒரு பெண்க்குரல் அது "அவள்". அவள் உதவி கோரி கோரிக்கை வைத்தாள். செய்யமுடியாத சூழ்நிலை எனக்கு. (அதுவும் சுயநலத்தால் தான்).  நான் சற்றும் திரும்பி பார்க்காமல் விடைத்தாள் நிரப்புவதயே இந்த ஜென்மத்து கடமையாய் செய்து கொண்டு இருந்தேன். அவளது குரல் கூக்குரல் ஆனது. நான் சற்றும் திரும்பி பார்க்காமல் தெறித்து பொய் விடைத்தாள் வீசி விட்டு விடுதிக்கு ஓடினேன். இரண்டு நாள் இடைவெளி. மீண்டும் வேறொரு செய்முறை தேர்வு, அவளை தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருந்தேன், அவளும் என் கணைகளுக்கு எதிர்கணைகள் வீசினாள். இரண்டு நிமிட தொடர் பார்வையால் என்னுள் அணைந்து கிடந்த மின்சார விளக்கு எரியத்தொடங்கியது. அவளின் இரண்டு சென்டிமீட்டர் புன்னகையில் என்னை நெருக்கமாக்கிக் கொண்டாள். சிரிக்க மறந்திருந்த எனக்கு சிரிப்பை ஞாபகபடுத்தியவள் அவள் தான்.