மீண்டும் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு பயணித்த நாடு சாம்பியா. சாம்பியாவின் தலைநகரம் லுசாக்கா. மீண்டும் துபாயிலிருந்து ஐந்து மணி நேர பயணமாய் நைரோபி தொடர்ச்சியாய் மூன்று மணி நேர இடைவெளி மீண்டும் இரண்டரை மணி நேர பயணம். கென்யா-விமானம் ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் வந்திறங்கியது லுசாக்கா மண்ணில். சென்ற முறைப்போல் அவசரமோ எதிர்ப்பார்ப்போ எதுவும் இல்லை. லுசாக்கா விமான நிலையம் மிகவும் சிறியது. விரைவில் வெளியேறும் ஆவலில் பயணிகள் எல்லோரும் முனைந்திருக்க நானோ அருகில் நின்ற ஆப்ரிக்க பிரஜை உயரத்தை கணக்கிட்டு கொண்டு இருந்தேன்.
சாம்பியாவில் நுழைய விசா பிரச்சனைகள் குறைவு. பயணிப்போர் வர்த்தகம் தொடர்பான பயணத்தை மேற்க்கொண்டால் சம்மந்தப்பட்ட சக
நிறுவனத்திடம் ஒரு கடிதம் பெற வேண்டும். அதன் நகல் எற்றுக்கொள்ளமாட்டாது. புதிய பயணியான என்னிடம் நகல் மட்டுமே உள்ள நிலையில். சாம்பியப் பெண்மணி தனக்கே உரிய பாணியில் கடிதத்தின் அசலை ஆங்கிலத்தில் கேட்க சில நொடிகளுக்குபின் என்னை அழைத்துக்கொண்டு போக வந்திருக்கும் நண்பரிடம் உள்ளது என்று பொய் சொல்லிவிட்டு வெளியே செல்ல அனுமதி கேட்டேன். அவளும் என்னுடைய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு அனுமதித்தாள். வெளியே சென்றால் என் பெயரிட்ட பலகையோடு எந்த ஆசாமியும் இல்லை. மேலும் விமான நிலையத்தில் காசு கொடுத்து தொலைபேசும் வசதி துளியும் இல்லை என்பதை நன்கு விசாரித்து அறிந்து கொண்டேன். பிறகு எனக்கே உரிய பாணியில் விழித்துக்கொண்டு நிற்க. என்னை விட நல்லவனாய் ஒரு சம்பியக்குடிமகன் தோன்ற அவனிடம் என் பிரச்சனையை விளக்க தன் கைபேசியை தந்து உதவினான். ஒரு வழியே என்னை தேடி வந்த தொழில் தோழன் என்னை கண்டுபிடித்து கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து என்னை மீட்டுக்கொண்டு போனான்.
எனது பயனப்பெட்டியை அவன் ஏற்றுக்கொள்ள வாகனத்தை நோக்கி நடந்தோம். கூட்டத்தை விட்டு வெளியே வந்தவுடன் காய்ந்த கருவேல மரத்தின் வாசனையோடு வீசியது சூரிய ஒளி. படர்ந்த காடுகள் அடர்த்தி குறைந்த காடுகள். அடர்த்தி குறைவான காடுகளில் தான் சிங்கம் போன்ற காட்டு விலங்குகள் வாழ்வதற்கும் வேட்டையாடுவதற்கும் வசதி. சிங்கம் காட்டெருமை சிறுத்தை யானை போன்ற விலங்கினங்களுக்கு குறைவில்லாத காடுகள். தன்சானியாவின் அண்டை நாடு என்பதால் அதே போன்ற வேற்று நாட்டு மக்கள் அதிகம் பயணிக்கின்றனர்.
அன்று ஒரு தொழில்நுட்பம் சார்ந்த பொருட்காட்சி ஒன்று நடைபெற்றது. விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரம் பயணித்து எங்களோடு வர்த்தகம் செய்யும் சக நிறுவனம் பங்கேற்ற பொருட்காட்சிக்கு சென்றோம். அத்தனை தரப்பு சாம்பியா மக்களையும் காணும் வாய்ப்பு. ஒரு பயமும் கூட. எவாளவு முயன்றும் சாம்பியர் அல்லாத வேற்று நாட்டவரை பரவலாக காண முடியவில்லை. மதிய நேர உணவு வேளையில் சென்றதால் மிகுந்த பசி.
உண்பதற்கு ஒன்றும் கிடைக்காத நிலையில் ஓரமாக ஓய்வெடுக்க பொழுது சாயத்தொடங்கியது. எனக்கென்று முன்பதிவு செய்யப்பட்டிருந்த அறையில் கொண்டுபோய் விடப்பட்டேன். அது ஒரு நல்ல விடுதி. சகல வசதியுடன் கூடிய அறை மற்றும் உணவு விடுதியும் கூட. இங்கு இந்திய உணவு கிடைக்கவில்லை மாறாக சாம்பிய நாட்டுனவும் சில மாமிசங்களும் கிடைத்தன. அதற்க்கு பழக இரண்டு மூன்று நாட்கள் பிடித்தது எனக்கு.
இரண்டு நாட்களுக்கு பிறகு என் வாழ்வில் அந்த கொடிய அனுபவம். குடும்பத்தை விட்டு பல மயில்கள் கடந்து வந்தது பாவம் என்றுணர்ந்த அனுபவம். சாம்பியாவில் இறங்கியது முதல் இரண்டு நாட்களாகவே உடல் வலி இருப்பதாக உணர்ந்தேன். பின்பு சில இடங்களில் சிறிய புள்ளிகள் இருப்பதாக தெரிந்தது. அதை சற்றே உதாசினபடுத்தி விட்டு வேலையை தொடர்ந்தேன். மூன்றாம் நாள் இரவு படுக்கைக்கு செல்லுமுன் உடல் வலியை போக்க சில மாத்திரை வில்லைகளை கட்டாயத்தின் பேரில் உட்கொண்டு படுக்கைக்கு சென்றேன். விடியற்காலை மூன்று மணி என்னை யாரோ தூக்கிப் போட்டு பிடிப்பதாக உணர்ந்தேன். அரைமணி நேரத்திற்கு பின் கை கால எல்லாம் உதர பதற்றத்துடன் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி கிடந்தேன். ஆப்ரிக்கா அதுவும் விடியற்காலை மூன்று மணி, யாரை கூப்பிடுவது. தெரிந்தவர்கள் ஒன்றிரண்டு பேர் தொலைபேசி எண்கள் கூட தேடி எடுக்க முடியாத சூழ்நிலை. தொலைபேசியை எடுத்து அவ்விடுதியின் வரவேர்பிற்க்கான என்னை தட்டினேன். அழகான பென் குரல் இந்த நேரத்தில் மருத்துவர்கள் யாரையும் வரவைக்க முடியாதென்றும் போக்குவரத்து பிரச்சனை என்றும் கூறியது. நன்கு பயந்திருந்த வேளையில் எப்படியாவது ஏற்பாடு செய்யுமாறும் இல்லை என்றால் நான் இறந்துவிடுவது உறுதி என்றும் என் வாய் உளறிக்கொண்டிருந்தது. இரண்டு நிமிடத்திற்கு பின் ஒரு கரிய நிற ஆசாமி வந்து என்னை அழைத்துக்கொண்டு போக சிறிய பயத்துடன் கூடிய நம்பிக்கை பிறந்தது. நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஒரு மருத்துவமனை. அந்த மருத்துவ மணியின் பெயர் Living Hope (பிழைப்போம் என்று நம்புவோம் இப்படி அர்த்தபடுதிக்கொள்ள) மணி நான்கு. நம் நாட்டில் பட்டி தொட்டிகளில் பழைய திரைப்படங்களில் வருவது போல காட்சியளித்தது அந்த மருத்துவமனை. சிறிது நாழிகை கழிந்ததும் ஒரு வெண்ணிற மேல் சட்டை அணிந்த கருப்பு குடிமகன் தன்னை மருத்துவர் என்று அறிமுக படுதிகொண்டார். பேசவே முடியாத நிலையில் அவரிடம் என் நிலையை விளக்கினேன் எனது நடுங்கிய குரலில். பொதுவாக அந்நாட்டு மருத்துவர்களின் மேல் ஆபிரிக்கர் அல்லாத வேற்று நாட்டவருக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. இதை முன்னரே அறிந்த எனக்கு வேறு வழி இல்லாமல் என் உடலை அடகு வைத்துவிட மருத்துவம் தொடர்ந்தது. ரத்த மற்றும் சிறுநீர் சோதிக்கப்பட்டது. சில மருந்துகளும் சொட்டு சொட்டாய் ஏற்றப்பட்டன. முடிவில் எனக்கு மலேரியா என்று குத்துமதிப்பாக முடிவெடுத்து சில வில்லைகளும் எழுதி கொடுக்கப்பட்டது. அதற்க்கு கட்டணமாய் இருநூறு அமெரிக்க டாலர்கள் சுமார் எட்டயிறத்து ஐநூறு ருபாய்.
குளிர் கொஞ்சம் குறைந்து போனது. காலை ஆறுமணிக்கு எனது தொழில் தோழர்களுக்கு தொலைபேசப்பட்டது அவர்கள் என்ன மீட்கும் பாணியில் வந்து விடுதிக்கு கொண்டுபோய் விட்டனர். அன்று பகல் முழுதும் அசதியில் தூக்கம். இரவு உணவிற்காக எழுந்து என் முகத்தை குளியல் அறை கண்ணாடியில் பார்த்து பயந்து தெறித்து விழுந்தேன். என் முகம் பூராவும் கொப்பளங்கள். என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை சில மணி நேரங்களுக்கு. எனது தொழில் தோழர்களை தொடர்ப்பு கொண்டேன். காலை வரை காத்திருக்க சொன்னார்கள். காலை வரை வேதனை. முடிவாக என்னை ஒரு இந்திய மருத்துவருடம் அழைத்து சென்றார்கள். அவர் என்ன பார்த்த மாத்திரத்தில் மாத்திரை வில்லைகளை எழுதி கொடுத்து இரண்டு வாரங்கள் கழிந்த பிறகு வரசொன்னார். இது நூறு சதவிகிதம் அம்மை தான்.
அந்த இரண்டு வாரங்களும் உட்கொண்ட உணவு பால் மற்றும் சில வகை பழங்கள் மட்டுமே. பதினான்கு நாட்கள் கடந்தது பதினான்கு வருடங்கள் கடந்தது போல உணர்வு. உடலில் புள்ளிகள் காய ஆரம்பித்ததும் மீண்டும் வேலை. இந்நிலையில் அந்த விடுதியின் நிர்வாகத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும் நன்றி சொல்ல தோன்றுகிறது. அவர்கள் இயல்பாகவே எல்லோரிடமும் நலன் விசாரிக்கிறார்கள் வேறுபாடின்றி. அக்கறை உள்ள மனிதர்களை காண முடிந்தது.
அம்மை குணமான பிறகு தினமும் தாங்கும் விடுதியிலேயே இரவு உணவு. தினமும் ஒரு மேசை பணியாளன் எனக்கு உணவுகளின் வகைகளையும் அங்கு பிரபலமான பானங்களையும் விவரித்து பிறகு நமக்கு உகந்த உணவை தறுவான். அவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சு அரசியல் பக்கம் போக என்ன நினைத்தானோ ரஜினியை தெரியுமா என்று கேட்டான். நான் அவரின் பரம ரசிகன் என்று சொல்ல. ரஜினிக்குப் பிறகு யார் அடுத்த இந்திய ஜனாதிபதி என்றான். அடபாவி ரஜினி அரசியல் வாதி அல்லர் அவர் ஒரு திரைப்பட நடிகர் என்று அவனுக்கு புரியவைத்து விட்டு சுட்ட கோழியை சுவைக்கலானேன். ரஜினியை பெயர் ஒரு ஆப்ரிக்க குடிமகன் உச்சரிக்க கேட்டது ஆனந்தம். அங்கு எளிய மனிதர்களை பரவலாக காண முடிகிறது. அனைவரும் சாதரணமாக ஆங்கிலம் பேசுவது சிறு ஆச்சரியம்.
சாம்பியாவில் அதிகாரபூர்வமான மொழி ஆங்கிலம். மேலும் எழுபதுக்கு மேற்பட்ட மொழிகள் வழக்கில் உள்ளன. அதில் பெம்பா என்ற மொழி பெரும்பாலும் பேசப்படுகிறது. நம் நாட்டின் இந்தி போல. இங்கு விவசாயம், மாட்டிறைச்சி ஏற்றுமதி, செப்பு சுரங்கங்கள் மற்றும் வனவிலங்கு சுற்றுலா சரணாலயம் போன்றவை நாட்டின் வருவாய். இங்கும் இந்துக் கோயில்கள் நிறைந்து கிடக்கின்றது. இங்கு கிறிஸ்துவர் இஸ்லாமியர் இந்துக்கள் என்று எல்லா இனத்தவரும் வாழ்ந்து வருகின்றனர்.
வந்த வேலை முடியவில்லை. சிறு விசா பிரச்சனையால் ஒரு மாத காலத்திற்குள் ஊர் திரும்ப வேண்டியதாயிற்று. இந்த பயணம் இனிமையானவை அல்ல என்றாலும் மறக்கக்கூடியதல்ல. உலகத்தின் வறண்ட பகுதி என்று சொல்லப்படுகிற ஆப்ரிக்க கண்டம் உண்மையில் வளம் கொண்ட பகுதி. போதிய திறனும் போதிய அரசியல் ஆதரவு பற்றாக்குறையும் தான் இன்னும் இந்த பகுதி பலமடையவில்லை.
மீண்டும் இன்னொரு பயணத்தில் சந்திப்போம்.
(பயணம் தொடரும்)
No comments:
Post a Comment