என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

14 March 2009

கானல் நதி

இன்று சனி இரவு, வாரத்தின் கடைசி நாள் மற்றும் கடந்த கால வாழ்கையை அசை போடும் நாள். எல்லா சனி இரவுகளும் நண்பர்களோடு கழியும். இன்று நான் மட்டும் விரும்பியோ விரும்பாமலோ தனிமையில். காரணம் பிடிகொடுக்க முடியாமல் நழுவுகிறது. நண்பர்களின் புகைமூட்டமோ பீர் வாசணையோ போதையின் உச்சரிப்போ இல்லாத சனிக்கிழமை. இரு கைகளும் தலையணையாய், நெற்றிக்கு நேராய் சுழன்று கொண்டிருக்கும் காத்தாடியும், சுவர் கடிகாரத்தின் நொடி முள் சப்தமும் துணை இருக்க நான் மட்டும் தனிமையில் போகின்றேன் எட்டாண்டுகளுக்கு முன்பு.

அன்று என் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த முதல் நாள். கன்னியர் வாசம் வீசினாலே பத்தடி விலகி போகும் ஆடவர் கூட்டத்தில் நான். என் பாதி வாழ்வை பள்ளியில் தொலைத்து விட்டு மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்த சமயம். மலை மேல் முட்டிய மேகமாய் அவள். முட்டிய வேகத்தில் கலைந்து போனாள். நான் நகராத பாறையாய் மெய் சிலிர்த்து நின்றேன். என் நாசியிலிருந்து மூச்சுக் காற்று எட்டிப்பார்க்க சில நிமிடங்கள் ஆகிப்போனது. அவள் அழகு என் கண்தேடும் அழகிற்கும் என் மனம் தேடும் அழகிற்கும் இடையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் பிறகு தினமும் ஓரிரு முறையாவது என் கண்ணிலும் கணவிலும் கடந்து போனாள். அவளோ இறை தேடும் கோழிக்குஞ்சாய் அவள் பாதையில் போய்க்கொண்டிருந்தாள். இடையில் தேர்வுக்கடலில் மூழ்கி முத்தெடுக்க முயன்று கொண்டிருந்தேன்.

முதலாம் ஆண்டு தேர்வு முடிந்து மாதங்கள் ஓடி விட்டது. இரண்டாவது வருடம் தொடங்கி என்துறையில் சில பொறுப்புகளை ஏர்கலானேன். அவளும் என் துறைசார்ந்ததால் தினமும் பார்க்கும் சந்தர்ப்பம். தினமும் வரும்போதும் போகும்போதும் அவள் கண்கள் மட்டும் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தது. அவளுக்கு மட்டுமன்று துறையில் அனைவருக்கும் தெரிந்த முகமாய் நானிருக்க, ஒரு செய்முறை இடைத்தேர்வு. நான் செய்து முடித்து, விடைத்தாள் நிரப்பிக்கொண்டிருந்தேன் எனது பின்புறம் இருந்து என் பேர் சொல்லி அழைக்கும் ஒரு பெண்க்குரல் அது "அவள்". அவள் உதவி கோரி கோரிக்கை வைத்தாள். செய்யமுடியாத சூழ்நிலை எனக்கு. (அதுவும் சுயநலத்தால் தான்).  நான் சற்றும் திரும்பி பார்க்காமல் விடைத்தாள் நிரப்புவதயே இந்த ஜென்மத்து கடமையாய் செய்து கொண்டு இருந்தேன். அவளது குரல் கூக்குரல் ஆனது. நான் சற்றும் திரும்பி பார்க்காமல் தெறித்து பொய் விடைத்தாள் வீசி விட்டு விடுதிக்கு ஓடினேன். இரண்டு நாள் இடைவெளி. மீண்டும் வேறொரு செய்முறை தேர்வு, அவளை தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருந்தேன், அவளும் என் கணைகளுக்கு எதிர்கணைகள் வீசினாள். இரண்டு நிமிட தொடர் பார்வையால் என்னுள் அணைந்து கிடந்த மின்சார விளக்கு எரியத்தொடங்கியது. அவளின் இரண்டு சென்டிமீட்டர் புன்னகையில் என்னை நெருக்கமாக்கிக் கொண்டாள். சிரிக்க மறந்திருந்த எனக்கு சிரிப்பை ஞாபகபடுத்தியவள் அவள் தான்.
 மாலையில் விடுதிக்கு சென்றதும் வார்த்தைகள் தேடினேன், அவள் கண்கள் சொன்ன கவிதையை அவளிடம் மீண்டும் காட்டி சரிபார்ப்பதற்கு. என் முதல் கவிதையே அவள் சொல்லிகொடுத்தது தான், தன் பார்வையால். என்னை கவிஞனாக்கிய பெருமை உண்டு அவள் கண்களுக்கு. 

ஒன்னரை ஆண்டு காலம் முடிந்திருந்த வேளையில் குறிப்பிடக்கூடிய ஒரு சனிக்கிழமை. அன்று அவள் அணிந்திருந்த சிவப்பு மற்றும் வெள்ளை நிற பாவாடை தாவணி என் ஆழ் மனதில் சலசலப்பை உண்டாக்கியது. அன்றிரவே அவளின் தொலைபேசி எண்ணை நண்பன் தயவில் சுழற்றினேன். நான் பேச வேண்டியதை எந்த முன் யோசனையுமின்றி பேசினேன். இன்று நீ அணிந்திருந்த பாவடை தாவணி எண்ணை அலைகழிக்கிறது. நீ அழகாய் இருந்தாய் என்று இறந்த காலத்தில் கூறி, செய்முறைய்த்தேர்வில் உதவ முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து, வேறு ஒன்றும் சொல்ல தோணவில்லை என்று துண்டித்துவிட்டு திரும்பினேன். அன்றிரவு ஏதோ இழக்க கூடாததை இழந்து விட்டவனாய் குறுகிப்போய் போர்வைக்குள் ஒளிந்து கொண்டேன். ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் அவள் அதே பாவாடை தாவணியில். இம்முறை என்னிடம் கவிதை இல்லை, அவள் விற்புருவத்தால் விடப்பட்ட கேள்விக்கு பதில் இல்லை. நான் மீண்டும் எனது பாதையில் சிரிக்க மறந்து நடக்கலானேன். மாதம் கடந்தது இம்முறை கேள்வி கேட்டது அவள் கண்கள் அல்ல அவள் உதடுகள். பேசியது விழியால் அல்ல மொழியால். ஒரு மணி நேர பேச்சு என்னை மீண்டும் அவளை நெருக்க மாக்கியது நண்பனாய். அன்று முதல் இன்று வரை. பிறகு என் கவிதைகளுக்கும் ஓவியங்களுக்கும் முதல் ரசிகையாய் ஆனாள் என் கவிதைக்கு காரணம் அவள் தான் என்று தெரியாமலே. காலச்சக்கரம் அதி வேகமாய் சுழல மூன்றாண்டு முடிவடைந்தது.

நான் இப்போது பொறியியல் கல்லூரியில் மாணவன். கடந்த மூன்றாண்டு காலமாக இருந்த லட்சியம் இப்போது இல்லை. காணாமல் போனது முன்பு இருந்த இறுக்கம், மௌனம் வெறுப்பு மற்றும் இல்லை, இதற்கு காரணமான அவளும்தான். ஏனோ தானோ என்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நேரத்தில் சண்டை, அடிதடி, அரியர்ஸ், காதல் தோல்வி, மது, தண்டவாளம், தாம்புக் கயிறு என்று பல தளங்களை தொட்டு விட்டு வந்திருந்தேன். வாழ்வின் இனிப்பை இழந்த புளிப்பின் போதையில் நான்.

ஒரு வெயில் கால மத்திய நேரத்தில் எங்கள் ஊரில் இருந்து புறப்பட்ட பேரூந்தின் நடு இருக்கையில் சுஜாதா வின் எழுத்தும் வாழ்க்கையும் புத்தகத்தோடு சேர்ந்து நானும் புரண்டு கொண்டிருந்தேன். ஒரு மணி நேர பயணம் முடிந்து இடம் வந்து சேர்ந்ததும் கல்லூரிக்கு போக மீண்டும் ஒரு இரண்டரை மணி நேர பயணம், அடுத்த பேருந்தின் கடைசி இருக்கையில் என் தலை சாய்ந்து இருந்தது. சாய்ந்து இருந்த என் நெற்றியில் குட்டு வைத்தாற்போல் வந்து நின்றாள் என் தோழி. அப்போது தான் தேவதை என்ற சொல்லின் முழு அர்த்தம் தெரிந்தது. மீண்டும் என் வாழ்வில் வசந்த காலம். துவண்டு கிடந்த என் வாழ்வில் விளக்கு எரிய தொடங்கி இருந்தது திரி இல்லாமலே. அந்த ஒரு வருடம் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் அவளுடன் தான் கழிந்தது அல்லது கழிக்கப்பட்டது. அவளுக்காக காத்திருந்த போது பிறக்கப்போகும் குழந்தைக்காக காத்திருக்கும் தகப்பனாய் உணர்ந்தேன். அவள் எனக்காக எப்போதும் கொண்டு வரும் இனிப்பு இன்று வரை என் நாவில் வடுக்களாய். மழை வருவது மரங்களுக்கு தெரிவது போல அவள் வெகு தூரத்தில் நடந்து வருவதை என் பரவச அலை எனக்கு காட்டி கொடுத்து விடும். அவள் வந்த சேர்ந்ததும் அந்த இடமே ஒரு புரியாத வாசனை வீசும், தெரியாத பாஷை பேசும், விளங்காத ஆசை காட்டும். அவள் பேசிச்சென்ற பிறகு ஒரு சிறுகதை கிடைத்து விடும். அவள் சிரித்து முடித்தால் அடுத்த கவிதை என் மனதுக்குள் ஊற்றெடுக்கும். அவள் சிணுங்களில் தான் என் காதலுக்கான சிறகு முளைத்தது. அவளுக்கும் முளைத்திருக்க வேண்டும், யாருக்கு தெரியும். தோற்றுப்போன காதலை சுமந்து கொண்டு மீண்டும் ஒரு காதல் போர் தொடுக்க விரும்பாமல் விசும்பிக்கொண்டிருந்தேன் யாருக்கும் கேட்காமலே.

பல சமயம் அவளை தொடும் சந்தர்ப்பம் கிடைத்த போதும் மனமில்லாமல் அவளை சுதந்திரமாய் பறக்க விட்டேன் வெறும் நண்பனாய். அவளும் பறந்தாள் பறந்துகொண்டு இருந்தாள். இரு வெள்ளை சிறகுகளோடு. அந்த வருடமும் அநியாயமாய் முடிந்து போனது. அதன் பிறகு நான் பட்ட கடனையும் விட்ட கடனையும் தீர்க்க திரைகடல் ஓடிக்கொண்டிருந்தேன்.

சென்ற முறை சென்னை சென்ற பொழுது அவளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு. இப்போது அவளிடம் முன்பிருந்த இரண்டு வெள்ளை சிறகுகள் இல்லை மந்திரக்கோலும் இல்லை. என்னிடமும் பேசுவதற்கு வார்த்தை இல்லை. எவனோ அவள் சிறகை முறித்திருந்தான் அல்லது முறிக்கப்பட்டு இருந்தாள். எனக்கு மழை பிடிக்குமென்றோ என்னவோ அவளே மழையாய் பெய்தாள். அரை மணி நேர மழைக்கு பின்னால் நிலவிய நிசப்தம் இன்று வரை தொடர்கிறது. சிறகொடிந்த காரணத்தை என் தலை மீது வைத்தாள். காரணம் நான் இல்லாமல் போனது என்றாள். நீருக்காக காத்திருந்து காய்ந்து போன என் முதல் செம்பருத்தி செடி எனக்கு ஞாபகம் வந்தது. நீரூற்ற எத்தனித்தால் அவள் இப்போது மாற்றான் தோட்டத்தில். இடையில் நமது கலாச்சாரம் இருபக்கமும் கை அசைக்கிறது ஓசை இல்லாமல். என்ன செய்வது, வெறும் தொலைபேசி எண் பகிர்தலோடு விடைபெற்றேன்.

இருவரும் ஆயிரத்து எண்ணூறு மயில் கல் இடைவெளியில் இருந்து கொண்டு கானலாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் தொழில்நுட்ப உதவியோடு. அதே வெள்ளை சிறகுகளோடு என் கனவை கடந்து போகிறாள். தினமும் தினமும் காலையில் ஒரு குறுஞ்செய்தி மாலையில் ஒரு குரல் செய்தி. எனக்கும் அவளை தொலைவிலிருந்தே தொட்டுவிட முடிகிறது. முன்பு வீசிய புரியாத வாசனை இன்றும் வீசுகிறது. தெரியாத பாஷைகள் எல்லாம் தெரிந்து விடுகிறது. விளங்காத ஆசைகளெல்லாம் விளங்கிவிடுகிறது.

இப்போது மீண்டும் பூக்க ஆரம்பித்து விட்டது என் செம்பருத்தி செடி தினமும் ஓரிரு பூக்களோடு. நானும் கானலாக நீர் ஊற்றுகிறேன் பூக்களை பார்பதோடு.

இன்னும் எவ்வளவு தூரம் ஓடும் இந்த கானல் நதி குறுக்கே அணை இருப்பது தெரியாமலே?

4 comments:

  1. Machi.. really nice Story da.. Starting la love story mathiri nalla than poikitu irundhichi.. ana poga poga than nee unnoda puthiya kamichita..
    But story is really nice da. keep it up..
    Cheers...
    Dinesh

    ReplyDelete
  2. Very realistic !

    It needs some cheer though.. (why does the story need to end so :( ?)

    Very good narration.. keep up the good work

    ReplyDelete
  3. its really nice day...keep it up..

    Senthil.

    ReplyDelete
  4. Hi Mr.Ilayugan,

    Good narration & nice words.

    But ithu konjam over ah theriyala...?

    ReplyDelete