என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

30 June 2010

பயணம் ( பாகம்1)

வெளிநாட்டு பயணம் என்றவுடனே அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள் தான் நம் எல்லோர் நினைவிலும் வரும். நம் உலக வரைபடத்தில் இன்னும் ஓர் முக்கிய கண்டம் எல்லா இயற்கை வளங்களும் இருந்தும் இன்னும் பின்தங்கிய தாகவே உள்ள ஒரு கண்டம். அது ஆப்ரிக்க கண்டம்.

என் தொழிற்துறை ஆகிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு தொழில் நுட்ப வர்த்தகத்திற்கு மிக முக்கியமான சந்தை ஆப்ரிக்கா. ஆகவே கடந்த இரண்டு வருடங்களாக துபாயில் இருந்துகொண்டு ஆப்ரிக்க நாடுகளுக்கு அடிகடி பயணித்து வருகிறேன். அங்கு போய் வந்த அனுபவங்களே இந்த வலைப்பூ பூப்பதற்கு காரணம். ஒவ்வொரு நாட்டின் அனுபவங்களையும் ஒவ்வொரு பாகமாய்  எழுதுவதாய் எண்ணம். இங்கு தொழில்நுட்பம் எழுதபோவதில்லை மாறாக மனிதநுட்பம்.

மதிநுட்பத்தின் பலனாய் பல இன்னல்கள், மனித நுட்பத்தின் இன்னல்களால் சில பயன்கள். தொழில்நுட்பம் எழுதுவதைவிட  மனித நுட்பம் எழுதுவதிலேயே ஆர்வம் தலைபடுகிறது என்னை விட திறமையான தொழில்நுட்பவாதிகள் இருப்பதால்.

பயணிப்போம்....

முதல் பாகமாய் கென்யா: 

முதல் முதலாய் என் காலடித் தடம் பதித்த ஆப்ரிக்க நாடு கென்யா. அதுவரை ஆப்ரிக்காவை உலக வரைபடத்தில் மட்டுமே பார்த்த எனக்கு ஆப்ரிக்க காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு. இனி பயணிப்போம். துபாய் விமான நிலையத்தில்,
 வெள்ளைநிற  கந்துராவை எல்லாம் கடந்து, எல்லா சம்ப்ரதாயங்களும் முடிந்த பிறகு கென்ய விமானம் நோக்கி நடக்கலானேன். மஞ்சள் நிற சட்டை, சிகப்பு நிற கழுத்துப்பட்டை,  நீல நிற கால் சட்டை என்று பார்த்தவுடன் பதறவைக்கிற தோற்றத்தில் ஆப்ரிக்க இளைஞர்களும், மேல்சட்டையை அவிழ்த்து இடுப்பில் கட்டப்பட்ட ஆப்ரிக்க இளம்பெண்களும் புடைசூழ விமானம் எரியாகி விட்டது. விமானத்திற்குள் செல்லும்போதே ஒரு வித்தியாசமான, வாசனை திரவியத்துடன் கூடிய வியர்வை நாற்றம். ஏன் இப்படி என்ற குழப்பத்தில் என் இருக்கை எண் தேடி அமர்ந்தேன். மூன்று பேர் சேர்ந்தாற்போல் அமரும் வண்ணம் இருக்கைகள் அதில் நடு இருக்கை எனக்கானது.  என் ராசிப்படி எப்போதுமே  என் இருக்கை அருகே பெண் வாடை வீசியது கிடையாது. என் விமான பயண வரலாற்றில் முதல் முதலாய் ஒரு ஆப்பிரிகப் பெண்மணி என் அருகே அமர்ந்திருந்தாள். அரைமணி நேரம் அவள் தலையில் இருக்கும் போலி சிகையை அலங்கரித்துவிட்டு என்னிடம் திரும்பி, மன்னிக்கவும் தயவு செய்து இன்னும் ஒரு இருக்கை தள்ளி அமருங்கள் இந்த இடத்தில் என் கணவர் அமரவேண்டும் என்று திருத்தமான ஆங்கிலத்தில் கூறினாள். நானும் அவர்களின் கலாசாரத்தை மெச்சியபடி ஒதுங்கி கொள்ள, பயணிகளை இருக்கையுடன் சுற்றி வளைக்கச் சொல்லி  விமான பணிப்பெண்ணின் குரல் ஒலித்தது ஒலி பெருக்கியின் உதவியுடன். இடதுபுற பாதையில் முழுதாய் சிகை வலிக்கப்பட்ட ஒரு கென்ய இளைஞன், வலதுபுற பாதையில்  ஒரு காரிருள் பெண்மணி முன் எச்சரிக்கை பட்டியலை விளக்கி முடிக்க விமானம் விண்ணில் கை விரித்து பறக்கத் தொடங்கியது. நான்கரை மணி நேர பயணம் சுற்றிலும் ஒரே கறுப்பின மக்கள் ஆங்காங்கே சில பாகிஸ்தானியரும், குல்லா அணிந்த குஜராத்திகளும்.  

நிறத்தை பற்றிப்பேச நானும், கறுப்பாய் இருக்கும் ஒரே தகுதியோடு சுற்றும் முற்றும் பார்வையை வீசிவிட்டு பெருமூச்சுடன் சாய்ந்துகொண்டேன். அப்போது தான் "கருவாச்சி காவியத்தில்" ஆசான் வைரமுத்து சொல்வது போல அட்டக்கறுப்பு, அடிச்சட்டிக்கறுப்பு, கெட்டிக்கறுப்பு, கரிக்கறுப்பு, கார்மேகக்கறுப்பு, காக்கா கறுப்பு, குயில் கறுப்பு இப்படி ஏழு வகையான கறுப்பையும் கணக்கேடுத்தேன். அந்த ஏழு வகை கறுப்போடு எட்டாவது கறுப்பாய் நானும் அமர்ந்துகொள்ள முகிலுக்குள் மூச்சிறைத்துக் கொண்டிருந்தது விமானம்.  

கொடுத்த உணவை அரைகுறையாய் மேய்ந்து விட்டு இருக்கையை இருக்கமாய் பிடித்து உறங்கதொடங்கி மூன்றாவது மணி நேரத்தில் விமானம் ஒரு மணி  நேரத்தில் இறங்கபோவதாக அதே விமான பணிப்பெண்ணின் குரல் அதே ஒலி பெருக்கியில்.

விமானம் இறங்கிய தரையில் நானும் இறங்கியாகிவிட்டது நைரோபி(கென்யாவின் தலைநகரம்) மண்ணில். விமான நிலையத்தில்  எத்திசை நோக்கி நடப்பதென்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த  சமயம் சீருடையில் ஒரு கென்யப் பெண்மணி எனக்கு உதவி செய்யும் தோரணையில் எதிர்பட்டாள். பேருதவி செய்தாள். நாட்டிற்க்குள் செல்ல அனுமதி சீட்டு வாங்குவதிலிருந்து  என்னை வாடகை காரில் ஏற்றி விடும் வரை அவளது சேவை பெரும்சேவையாய். கடைசியில், இவ்வளவு  நேரம் அவள் கண் பேசிய பாஷை எனக்கு புரியாததால் அவள் வாய் பேசியது  பணம் கேட்பதாய். வேறு வழியன்று நான்கு டாலர்களை கொடுத்து விட்டு நகர்ந்தேன். வெளியே வருவதற்குள் சிறிது என் மார்பில் மூச்சு முட்டியது முதல் பயணம் என்ற தலைப்புடன்.

போகிற வழியில் பளிச்சென்ற  தார் சாலை திடீரென்று மண் சாலையாக மாற நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் தொடர்ந்தது பயணம் எனது விமான பயணத்தின் தொடர்ச்சியாய். சுற்றிலும் பரவலான மரங்கள் நிறைந்த காடுகள், பார்த்த மாத்திரத்தில் கற்பனைகள் தோன்றியதோடு கூடிய சிறிய பரவசம். நைரோபி சிறிய மலைப் பிரதேசம் போன்ற தோற்றம். அவர்களின் மண் மற்றும் சீதோசன நிலைக்கு ஏற்றாற்போல் காபி மற்றும் தேயிலை பயிரிட அதை ஏற்றுமதியும் செய்கிறார்கள். கென்யா ஆப்ரிக்காவின் நடு பகுதியில் இருப்பதால் இன்னும் ஒரு வசதி, சுற்றி உள்ள எந்த நாடுகளுக்கு போவதயினும் நைரோபி மண்ணை மிதித்து விட்டு தான் பெருமபாலும் செல்லவேண்டும் அதற்கு அவர்களின் கென்யா விமான சேவை மையமும் ஒரு முக்கியமான காரணம்.

ஒரு வழியாக சேர வேண்டிய இடம் வந்து சேர்ந்தாயிற்று. வழக்கமான உபசரிப்பு, இந்தியர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதாய். என்னோடு மற்றொரு தொழில்நுட்பவாதி  எனக்கு துணையாய் இருக்க கழிந்தது ஆப்பிரிக்காவில் எனது முதல் நாள். முதல் நாள் இரவு தங்கிய குடில் வகை அறை சிறியதாக இருந்தாலும் சுத்தமாகவும், குளிரூட்டி இல்லாமலே குளிர்ச்சியாகவும் இருந்தது. அடுத்த பிரச்னை உணவு. விமானத்திலிருந்து இறங்குவதருக்கு முன் கிடைத்த ஒரு கோப்பை தேனீரோடு அன்றைய தினம் முடிய நல்ல பசி. என்ன கிடைக்குமென்று அங்கு உள்ள குடில் சமையல்காரனை அணுக காத்திருந்தது அதிர்ச்சி(எதிர்பாராதபோது இந்திய உணவு கிடைப்பதே அதிர்ச்சி தானே) . அந்த குடிலின் மேலாளர் ஒரு பாகிஸ்தானிய பெண்மணி. உணவு பதார்த்தப் பட்டியலை கேட்டவுடன் சமையல் செய்பவனை அழைத்து அறிமுகம் செய்து வைத்தாள் அவன் ஒரு கென்ய சமையல்காரன். உணவு பட்டியலில் இருந்தது அனைத்தும் இந்திய உணவு வகைகள். ஆச்சர்யத்துடன் என் கருவிழிகள் உருள இரண்டு சப்பாத்தியோடு நிறுத்திக்கொண்டேன் பின்விளைவுகள் ஏதேனும் வருமோ என்ற அச்சத்துடன். எவ்வளவு முயன்றும் அம்மக்களின் உணவு பழக்கவழக்கங்களை முழுதும் கண்டறிய முடியவில்லை அல்லது புரியவில்லை. பெரும்பாலும் மாட்டிறைச்சி உருளை கிழங்கு மற்றும் கடலிறைச்சி மட்டுமே. அரிசி வகையறாக்களை எல்லாம் அரிதாக உண்ணும் பழக்கம் உள்ளவர்கள். சிறிது மேல்மட்ட குடிமக்களுக்கென பிசா, பர்கர் வகையறாக்களும் உண்டு.   

சாப்ட்டாகிவிட்டது மேலும் தொலைகாட்சியில் ஒன்றும் பார்க்கும்படியும் புரியும்படியும் இல்லாததால் என்ன செய்வது என்று விழித்துகொண்டிருந்த சமயம், ஒரு ஆனந்தம் ஒரு சாதாரண தமிழனுக்குரிய ஆனந்தம். அயல் தேசத்தில் தேன்தமிழ் கேட்கின்ற ஆனந்தம்.  பக்கத்துக்கு அறையிலிருந்து ஒரு ஆண் குரல் யாருடனோ தமிழில் தொலைபேசிக் கொண்டிருந்தது. மேலும் அந்த குரலுக்கு சொந்தமான முகத்தை பார்க்கும் ஆவலோடு வெளியில் போய் அக்குளிரிலும் காற்று வாங்கிக்கொண்டிருந்தேன். ஒரு பதினைந்து நிமிட இடைவெளிக்குப்பின் வெளியில் வந்தார் அந்த தொலைபேசி குரல்காரர். என்னை பார்த்த மாத்திரத்தில் தமிழில் உரையாட ஆரம்பித்தவரிடம் (எப்பிடிதான் கண்டுபிடிக்கிறாங்களோ) "ஆப்ரிக்காவை பற்றிய ஒரு அலசல்" கேட்டுவிட்டு உறங்கப்போனேன். அடுத்த மூன்று நாள் இரவுகளும் ஒரு குப்பி பீருடன் அவருடைய "ஆப்ரிக்கா ஒரு அலசல்" கேட்ட பிறகே உறக்கம். அவரும் ஒரு ஆப்ரிக்கப் பயணி. சென்னையில் இருந்துகொண்டு பயணிப்பவர். கடைசி நாள் பகல் வெறும் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் பகிர்தலோடு அவரிடமிருந்து விடைபெற்றேன்.

இடையில் ஒரு நாள் எனக்கு துணையான தொழில்நுட்பவாதியும்  நானும் மதிய உணவிற்கு வெளியே சென்றோம். அது இந்திய உணவகங்கள் நிறைந்த இடம் பதினைந்து இருபது உணவகங்கள் ஒரே இடத்தில். அங்கு சென்று பொதுவாக போடப்பட்டு இருந்த மேசைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அமர்ந்த இரண்டு வினாடிகளில் தேனீக்கள் போல வந்து மொய்த்த மொத்த கடைகளின் மக்கள் தொடர்பு ஆசாமிகள் அனைவரும் சிந்திய வேர்வையில் சிறிய புளித்த வாடை. வேறு வழி இல்லாமல் உத்தரவிட்டு வாங்கிய உணவை முடித்து விட்டு சுவகைலியில்(கென்ய மொழி இந்தியாவில் ஹிந்தி போல)  நன்றி கூறி இடத்தை காலி செய்தோம். கென்யாவில் உள்ள கணக்கெடுக்கப்பட்ட மொத்த மொழிகள் நாற்பத்தி மூன்று. அதில் அதிகார பூர்வமாக உபயோகிக்கப்படும் மொழிகள் ஆங்கிலம் மற்றும் சுவகைலி. பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே சுழல்கிறது பூமியில் அவர்களது பகுதி.

வந்த வேலை முற்றிலும் தோல்வியுறும் நிலையில், அடுத்த நாட்டு பயணம். பயணித்த நாடு டான்சானியா. மீண்டும் அடுத்த விமானத்திற்கான நேரம் நெருங்க, ஒரு வாடகை வண்டியில் நான் ஏறிக்கொள்ள, ஒரு இருபது நிமிடம் ஒரே இடத்தை பூமியில் வட்டமடிக்கும் பருந்தின் நிழல் போல சுற்றிகொண்டிருந்தார் அந்த கென்ய ஓட்டுனர். நான் கரிசனம் கலந்த பயத்துடன் விசாரிக்க வண்டியில் எண்ணெய் குறைவு  என அறிந்துகொண்டேன். அவர் முற்றிலும் தேடியதோ கள்ள சரக்கு. அதாவது வெளி சந்தையில் விற்கப்படும் எண்ணெய். ஆண்டவன் அனுதாபத்துடன் கிடைத்து விட்டது. விமான நிலையம் வரை கொண்டுவந்து சேர்த்த ஓட்டுனருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு உள்ளே நுழைந்தேன். விமானத்தில் ஏற அனுமதி சீட்டு அளிக்கும் அந்த கென்யப் பெண் எனது பிரயாண அனுமதிப் பத்திரத்தில்(passport) உள்ள நிழற்படத்தால் குழப்பமடைந்து எனக்கு அனுமதி மறுத்துவிட்டாள். ஆண்டவன் சோதனை  என்று மீண்டும் மல்லுக்கட்டி வெற்றிபெற்றேன். நைரோபியிலிருந்து தர்-எஸ்-சலாம் செல்லும் விமானத்திற்குள் சென்று ஆசுவாசத்துடன் அமர்ந்த பிறகே என் மூச்சுக்காற்றின் அழுத்தம் சதவிகிதம் குறைவதை உணர்ந்தேன். மீண்டுமொரு பயணத்திற்கான  கற்பனையில் தொடர்கிறது எனது பயணம்.

மீண்டும் பயணிப்போம்.......

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க.உங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள். அன்புடன்

    ReplyDelete